Tuesday, December 23, 2014

குளிரும் காலை

உதித்த ஆதவனும் குளிர் கண்டு, 
மேக போர்வைக்குள் உறங்க செல்ல, 
நான் மட்டும் எழுந்து 
அலுவலக்ம் செல்ல வேண்டுமா ??

கனவில் வந்த காந்தி


கிரேஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என் கனவிலும் வந்தார் காந்தி.  அவரும் நானும் பேசிய உரையாடல் கீழே..

1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?
மறுபிறவியா?.. இதுவே எப்ப மூட்டைய கட்டுவோம்னு இருக்கு.. மறுபிறவி வேண்டாம் ஐயா !!... தப்பித்  தவறி பிறந்தாத் தமிழனாகவே பிறக்க வேண்டும். 

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
ஹம்ம்.. அப்படியும் நடக்குமோ??.. தவறி நடந்தால்..
என் முதல் வேலை  அரசு பள்ளிகளின் கல்வி தரத்தையும், ஆரம்பச் சுகாதார மையங்களின் தரத்தையும் உயர்த்துவதுமாக இருக்கும்.
அடுத்து, அமெரிக்காவில் இருப்பது போல, அனைத்து பள்ளிகளிலும் (தனியார் பள்ளி உள்பட) தொடக்க பள்ளிக் கல்வி இலவசமாகத் தர முயற்சி செய்வேன். பின்பு, அனைத்து நதிகளையும் இணைக்கச் முயற்சி மேற்கொள்வேன்.

3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்?
மக்களுக்கு பயன்படும் திட்டம் எதுவாயினும் இந்தியர்கள் அனைவரும் வரவேற்பர். இதில் வெளிநாட்டு இந்தியர் விதிவிலக்கு இல்லை என்று உறுதியுடன் நம்புகிறேன். ஒருவேலை அவர்கள் எதிர்த்தால், அதற்கான காரணத்தை கேட்டு அறிந்து, அது சரியான காரணமாக இருக்கும் பட்சத்தில் அதை கருத்தில் கொண்டு அவர்களது பயத்தினை நீக்க முயற்சி செய்வேன்.

4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?
முதியோருக்கான சலுகைகள் அனைத்தும் அலைச்சல் இன்றி, முடிந்தவரை, அவர்கள் வீடு சென்று சேரும் வகைளில் பார்த்துக் கொள்வேன்.
வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதி, போக்குவரத்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களும் முதியோர்களின் வசதியை மனதில் கொண்டு இயங்கும் படிச் செய்வேன்.

5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?
மக்கள் தேவையே தங்களின் முதல் தேவை என்பதை அனைத்து அரசியல்வாதிகளும் உணர வேண்டும். அதற்கு, முதற்படியாக அனைவரும் அவர்களது தொகுதியில் தங்கும் படிச் செய்வேன். பின்பு, அத்தொகுதி பொது மக்களின் மனுவை கணினியில் ஏற்றி, அவற்றை கண்காணித்து, அதன் மூலம் அரசியல்வாதியின் செயல்  திறனை  முறையாக அறிந்து, அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் மறுபரிசீலனை செய்ய வழி வகைச் செய்வேன்.

6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?
உண்மையில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்று நினைக்கும் பட்சத்தில் நீதி மன்றம் செல்வதில் தவறு இல்லை. ஆனால் நம் நீதி மன்றங்களை நம்பி போனால், நாம் பேரன், பேத்தி பெற்ற பின் தான் தீர்ப்பு வரும். எனவே நீதி மன்றத்தை மட்டும் நம்பி இருக்காமல், மதிப்பெண்ணை விட நம் மதியை பெரிதென மதிக்கும் இடம் நோக்கி செல்ல அறிவுறுத்துவேன்.

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?
நம் சங்க இலக்கியத்திலும், பண்டைய சமஸ்கிருத வேத நூல்களிலும் புதைந்து உள்ள அறிவியலை, மொழி வல்லுனர்கள் துணை கொண்டு படித்து அறிந்து, நம் இந்தியா ஒளிர, நம் மக்கள் சிறக்க, படைப்புகள் படைக்க நம் விஞ்ஞானிகளுக்கு வழி வகை செய்வேன்

8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?
மக்களுக்கு பயன்படும் திட்டத்தை யாரும் நிறுத்த துணிய மாட்டார்கள். மக்களும் விடமாட்டார்கள்  என்று நம்புகிறேன்.

9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?
இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும் என்ற பதிவில் நான் கூறி உள்ளது போல சமூகத்தின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட காலத்திற்கு (5 ஆண்டோ, 10 ஆண்டோ)ஒரு முறை அறிந்து, அதற்கேற்ப அச்சமூகத்திற்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் திட்டத்தை செயல் படுத்துவேன்.

10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?
மானிட பிறவி அல்லாத பிறவியா?...அப்படினா ஏதோ ஒரு வகை பறவையாக பிறக்க ஆசை. பறவைகளைக் மீது எப்பொழுதும் ஈர்ப்பு உண்டு.  பறவையாகப் பிறந்து, இயற்கையோடு வாழ்ந்து, வான் உயரப் பறந்து, உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை 

Tuesday, June 24, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? - தொடர் பதிவு

தொடர்  பதிவின் தொடர்ச்சியாக நண்பர் கிரேஸ் அவர்கள் கேட்ட 10 கேள்விக்கான பதில் இதோ :)

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
100 வது பிறந்த நாளா?? வைரமுத்து கூறியது போல 'எட்டாம்' எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்லை என்பதே என் கூற்றும்... அப்படியே நான் தவறி போய் இருந்தா, என்னோட பிறந்த நாளை எல்லாரும் கொண்டாடும் படி இருக்கணும் (பேராசை தான்.. but, பரவாலை :-))

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
'அலுவலக வேலையை' போல மற்ற வேலையிலும்  ஒழுங்காக கவனம் செலுத்த.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
முதல் கேள்விக்கான பதில் எழுதும் பொழுது :)

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
கார்/பைக் எடுத்து ஒரு பயணம் போவேன். மனைவியுடன் எங்கையாச்சும் 'outing' போவேன். 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
கண்ணா, இதை படினு சொல்வேன்  http://covaiveeran.blogspot.com/2012/02/marriage.html  :)

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
உலக மக்களை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் மீது அக்கறை காட்டும் யாரிடமும் 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
என்ன தகவல் என்பதை பொறுத்து தடுக்க முயற்சி செய்வேன். 

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
"இதுவும் கடந்து போகும்னு" சொல்வேன். 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
பாதி நேரம் அலுவலக வேலை பார்ப்பேன். கொஞ்சம் 'xbox' விளையாடுவேன். மூடு இருந்தா புத்தகம் படிப்பேன். 

Sunday, March 16, 2014

புலியின் சீற்றம்


மருந்துக்காக அழித்தாய், 
மாந்திரிகத்துக்காக அழித்தாய், 
எனை அழிப்பதனால் காட்டினையும்  
அழிக்கிறாய் என உணர்ந்தாயா? 

வயிற்றுப் பசிக்கு  வேட்டையாடும் 
எனை கொடிய மிருகம் என்கிறாய், 
பணப் பசிக்கு இனத்தையே வேட்டையாடும் 
உனை என்ன சொல்லி அழைக்க?

பல லட்சமாக காடுகளை ஆண்ட 
எனை சில நூறாக குறைத்தாய்,
நான் சுவடின்றி அழியும் வரை 
உன் கொலை வெறி அடங்காதா?

தேசிய விலங்கென, வீரத்தின்
சின்னமென அடையாளம் தந்தாய்,
இன்றோ எனை அழியும் இனங்களின்
அடையாளமாக மாற்றியது ஏனோ?

நானும் உனை போல இப்புவியில்  
வாழ உரிமை பெற்ற இனமன்றோ !!
ஆறறிவு பெற்றதனால் மட்டுமே, நீ
தனியே வாழ முடிவெடுத்தாயோ?

பரிணாம வளர்ச்சியில் நீ பெற்ற
அறிவு எனை அழிக்கத்  தானா? 
இப்பொழுதேனும் விழிப்பாய் மனிதா !!
நீயும் வாழ் .. என்னையும் வாழ விடு !!

Tuesday, February 4, 2014

மகிழ்ச்சி

கடலுக்கு நதியின் வருகை மகிழ்ச்சி
கமலிக்கு ஆதவனின் உதயம் மகிழ்ச்சி

மழையோடு வெயில் வானவில்லிற்கு மகிழ்ச்சி
மானிற்கு பசுமையான புல்வெளி மகிழ்ச்சி

நெற்கதிர்க்கு நீரின் வரவு மகிழ்ச்சி
நெசவாளிக்கு பட்டு உற்பத்தி மகிழ்ச்சி

வேழத்திற்கு  இன்சுவை கரும்பு மகிழ்ச்சி
வேதனையுறும் குழந்தைக்கு தாலாட்டு மகிழ்ச்சி

தேனீக்கு மலரின் மலர்ச்சி மகிழ்ச்சி
தேனே, எனக்கோ உன் புன்னகையே மகிழ்ச்சி

Related Posts Plugin for WordPress, Blogger...