Friday, April 13, 2012

சவால்



இந்த தமிழ் புத்தாண்டு அன்று உங்களுக்கு ஒரு சவால் இந்த பாடலை 
தடை  இல்லாமல் படியுங்கள் பார்க்கலாம். என்னால் இதுவரை முடியவில்லை.  இப்பாடல் அருணகிரி நாதர் அவர்களின் கந்தர் அந்தாதியின் 54ஆவது பாடல்.  முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். 

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
 திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
 திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
 திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இந்த பாடல் ஒன்று போதும் நம் தமிழ் மொழியின் செழுமையை  உலகறிய.

Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு



அறம் தழைத்து,
செல்வம் செழித்து,
அறிவு மிளிர்ந்து, 
ஆரோக்கியம் சிறந்து,
இன்பம் பெருகி, 
மகிழ்ச்சி பொங்கி,
நந்தன வருடம், 
நந்தவனம் ஆகட்டும் !!

Related Posts Plugin for WordPress, Blogger...