Wednesday, November 28, 2012

இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும்

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு - இன்று பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடயம். முதலில் இடஒதுக்கீடு கொண்டு வந்தற்கான காரணத்தைப் பார்போம். Dr.அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனம் வகுத்த பொழுது பல்வேறு துறைகளிலும் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். நம் முன்னோர்கள் தொழில்வாரியாகச் சமூகத்தினை பல பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு வந்தனர். காலப்போக்கில் சில சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து, சில சமூகத்தினரை உயர் சாதி எனவும், வேறு சிலரை கீழ் சாதி எனவும் பார்க்கும் பழக்கம் உருவானது. ஆங்கிலேய ஆட்சியில் இந்த வேற்றுமை பன்மடங்கு பெருகியது. இதன் காரணமாகச் சில பிரிவு மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாகவே இருந்து வந்தனர். எனவே, சுதந்திரம் அடைந்தவுடன் இந்த நிலை மாற, அனைவரையும் ஒரே நிலைக்கு கொண்டு வர இடஒதுக்கீடு Dr. அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்பட்டது.

நாம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகிய இன்றைய சூழலில் இது தேவையானதா?என்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை இது தேவையானதே.

இன்றளவும் நம் சமூகத்தில் சாதி அடிப்படையில் ஒரு பிரிவு மக்களை அடக்கி ஆளும் அசட்டுத்தனம் இருக்கத்தான் செய்கிறது. நகர்புறங்களில் ஒரு அளவு குறைந்து இருந்தாலும், கிராமப்புறங்களில் வெகுவாக இருக்கத்தான் செய்கிறது. எனவே,அவர்கள் மேலே ஏறி வர, வெளி உலகம் பற்றி அறிய, தங்கள் ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து போராட இடஒதுக்கீடு என்ற துணை அவர்களுக்குத் தேவை. பல நேரங்களில் இடஒதுக்கீட்டின் பயன்பாட்டை நாம் காணத்தவறுகின்றோம். இடஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைத்து என்னுடன் பயின்ற நண்பர்கள் பலர் இன்று நல்ல நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் பெற்ற தகுதி மதிப்பெண் குறைவாக இருந்து இருக்கலாம். ஆனால் அவர்கள் வந்த சூழலைப் பற்றி அறியும் பொழுது தான் அவர்கள் மதிப்பெண்னின் உண்மையான மதிப்பை உணர முடிகிறது. இது போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மேலே வருவது அவர் சார்ந்த சமூகத்திற்கு ஒரு உத்வேகத்தை தரும். அந்த சமூகமே முன்னேற அது ஒரு வாய்ப்பாக அமையும். அனைவரையும் ஒரு தளத்தில் வைத்துப் பார்க்கும் நாள் வரும் வரையில் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும்.

இவ்வளவு வலிமை வாய்ந்த இடஒதுக்கீடு என்ற சக்தி இன்று சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை எனபதே கசப்பான உண்மை. அதன் காரணமாகவே பலரும் இடஒதுக்கீட்டிற்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர். இடஒதுக்கீட்டை வைத்து சமூகத்தை முன்னேற வழிவகை காணாமல், அதை வைத்து ஓட்டு வங்கியை பெருக்கும் அரசியல் தான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. இடஒதுக்கீடு அமலில் இருந்து 65 ஆண்டுகளாகியும், இடஒதுக்கீட்டினால் பயன்பெற்றவர்கள் ஏராளமாக இருந்தும், இடஒதுக்கீடு குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இடஒதுக்கீட்டை பிறப்புரிமை போல பலரும் கருதுவது. தங்கள் சமூகம் வளர்ச்சி அடைந்த பின்னரும் தங்களுக்கான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய எவரும் தயாராக இல்லை.

எனவே, அரசே முன் வந்து ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட காலத்திற்கு (5 ஆண்டோ, 10 ஆண்டோ)ஒரு முறை அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு மக்கள் நலன் ஒன்றே பேணும் தலைவர்கள் நம்மிடையே உருவாக வேண்டும். பொதுமக்களாகிய நாமும் நமக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கும், இடஒதுக்கீடுக்கும் நாம் தகுதியுடையவரா? என்று சுயபரிசோதனை செய்து அதற்கேற்ப செயல்பட்டால் இடஒதுக்கீட்டின் பயன்பாட்டினை நம் சமூகம் முழுமையாக உணர முடியும்.

மாறாக இவை நடக்காவிட்டால்,இடஒதுக்கீடு வழங்கியதற்கான
நோக்கம் அடிப்பட்டு, சமதர்ம சமத்துவ சமுதாயம் என்றுமே ஒரு எட்டாக்கனியாகவே இருக்கும். இடஒதுக்கீட்டின் சக்தியை உணர்ந்து, அதனை ஒழிக்க முனையாமல், அதனை சீர்திருத்த முயல்வோம். அதன் மூலம் சமதர்ம சமத்துவ சமுதாயம் உருவாக்குவோம் !!

8 comments:

  1. Correct one.
    Reservation is very much needed. But, it should reach the needy people.

    ReplyDelete
  2. 65 வருடமாக இருக்கும் இட ஒதுக்கீட்டினால் எத்தனை பிற்பட்ட வகுப்பினர் உயர்ந்திருக்கிறார்கள் என்ற கணிப்பு அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அந்த கணிப்பு மிகவும் தேவை. தங்கள் வருகைக்கும்,மறுமொழிக்கும் நன்றி ஐயா !!

      Delete
  3. என்னை பொறுத்தவரையில் ஜாதி மதம் சார்ந்த இட ஒதுக்கீட்டை விட, இக்காலகட்டத்தில், 'வாழும் இடம்' சார்ந்த இட ஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் தரலாம்.

    பின்குறிப்பு: கண்டு மகிழ 'விஸ்வரூபம்' திரைப்படம் 27 மார்கழி முதல்!!!

    ReplyDelete
    Replies
    1. தயவு செய்து உன் பேரில் பின்னூட்டமிடவும் லோகநாதன்

      Delete
  4. நர்த்தகி ஸ்ரீலங்காDecember 18, 2012 at 1:05 PM

    முதலில் நல்ல தலைப்புக்கு வாழ்த்துகள். ஆனால் எனக்கு உங்கட கருத்தில் முழுமையான உடன்பாடு இல்லை. ஏன் என்று கேட்டால், இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தில் ஜாதி மட்டும் கொண்டு அவ்வளவு எளிதாக மனுசங்களை அறிய இயலுமா என்று தோனவில்ல. என்னோட கருத்தில் பிழையிருந்தால் நீங்கள் மன்னிக்கோணும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நர்த்தகி அவர்களே :-)..தாங்கள் கூறுவது ஒரு விதத்தில் உண்மை. ஆயினும், இடஒதுக்கீடு பெற்று வரும் சமூகங்களின் வளர்ச்சி குறித்து முறையான ஒரு ஆய்வு நடந்தால், யாருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை துல்லியமாக இல்லை என்றாலும் ஓரளவு கூற முடியும் என்றே கருதுகிறேன்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...