Saturday, October 1, 2011

தமிழகத்தின் தந்தை காமராஜர்


காமராஜர் அவர்கள் பற்றி பல கட்டுரைகள், பதிப்புகள், ஒலிநாடாக்கள் இருக்கின்றன. அவர் பற்றி நான் என்ன புதிதாக கூற போகிறேன் என்று நினைக்கலாம். உண்மை!! நான் ஏதும் புதிதாக சொல்ல போவதில்லை. காமராஜர் வாழ்க்கை பற்றி அறிந்தவர்களுக்கு இந்த பதிவு அரைத்த மாவை அரைத்தது போல இருக்கும். இருப்பினும் அவரை எழுதாமல் எனது தளம் முழுமை அடையாது. எனவே இந்த பதிவு.

காமராஜர் இறந்து 6 வருடங்கள் கழித்தே நான் பிறந்தேன். காமராஜர் பற்றி நான் கேட்டது எல்லாம் என் அம்மாவிடம் இருந்து மட்டுமே. நமது பாட திட்டத்தில் காமராஜர் குறித்த தனி பாடம் இருந்த மாதிரி எனக்கு ஞாபகமில்லை. சில மாதம் முன்பு வரை காமராஜர் என்றால் கர்மவீரர், கிங்மேக்கர், படிக்காத மேதை, பெருந்தலைவர் என்று மட்டுமே தெரியும். ஆனால் எதனால் இந்த பட்டப்பெயர்கள் வந்தன என்பது தெரியாமல் 'ஆட்டு மந்தை' போல எல்லாரும் சொல்கிறார்களே நாமும் சொல்லுவோம் என்று இருந்தேன். சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு இருந்த ஆர்வம் கூட நமக்காக உழைத்த தலைவர் பற்றி தெரிந்து கொள்வதில் இல்லையே என்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. சில மாதம் முன்பு, வலைத்தளத்தில் நான் உலாவி கொண்டு இருந்த பொழுது, காமராஜர் வாழ்க்கை வரலாற்றினை படிக்க நேர்ந்தது. இப்படியும் ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்தாரா என்ற வியப்பை தந்தது.

காமராஜர், குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு மகனாக ஜூலை 15 ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு பிறந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பிற்படுத்தப்பட்ட குலத்தில் பிறந்தாலும், அவரது அயராத மக்கள் பணி அவரை தமிழகத்தின் தலை சிறந்த முதல்வராக ஆக்கியது. பின்னாளில் அவருக்கு இந்தியாவின் தலை சிறந்த விருதான பாரத ரத்னா விருதையும் வாங்கி தந்தது.

1954 முதல் 1963 வரை அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவரது சிறப்பை பற்றி என்ற எழுத வேண்டும் என்றால் எழுதி கொண்டே இருக்கலாம். அதற்கு இந்த தளம் போதாது. எனவே காமராஜர் பற்றி நான் அறிந்தவற்றில் சிறு துளிகள் மட்டும்
1. "வீடுதோறும் கலையின் விளக்கம்,வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடுமுற்றிலும் உள்ளன ஊர்கள்,நகர்கள் எங்கும் பலபல பள்ளி"

என்ற பாரதியின் பாடலுக்கு ஏற்ப ஊராட்சி தோறும் பள்ளிகள் அமைத்தார். ஏழை குழந்தைகள் பசியின்றி படிக்க மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் முலம் கல்வி புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தினார்.

2. விவசாயம், மின்சாரம், தொழில் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தமிழகம் அசுர வளர்ச்சி பெரும்படி செய்தார். அவரது ஆட்சி காலத்தில் எண்ணற்ற மின் நிலையங்களும், அணை தேகங்களும், தொழில் கூடுங்களும் கட்டப்பட்டன.

3. தன் தாயை விட தாய்நாட்டை நேசித்தவர் காமராஜர். இறுதி காலம் வரை சிவகாமி அம்மையார் ஒரு எளிய விட்டில் தான் வாழ்ந்து வந்தார். தனக்கு பதவி வந்தது என்பதற்காக தனது நிலையையோ, தனது உறவினர்களின் நிலையையோ அவர் மாற்றவில்லை. தன் தாய்க்கு மாதம் அவர் அனுப்பிய பணம் வெறும் ரூபாய் 120/- மட்டுமே.

4. பதவியை பெரிதாக நினைக்காமல் வயதானவர்கள் உயர் பதவியில் இருக்ககூடாது என்ற திட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன்னுதாரணமாக தனது முதல்வர் பதவியை 1963 ஆம் ஆண்டு ராஜனாமா செய்தார். அவர் நல்ல நோக்கத்துடன் செய்து இருந்தாலும் அவர் செய்த ஒரே தவறான காரியம் (என்னை பொறுத்தவரையில்) இதுவாக தான் இருக்க முடியும். மேலும் நேரு காலமான பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜருக்கு பிரதமராகும் வாய்ப்பு அமைந்த போதும் அதை ஏற்க்காமல் லால் பகதூர் சாஸ்திரி அவர்களையும், அவர் இறந்த பின்னர் இந்திராகாந்தி அவர்களையும் பிரதமராக்கினார்.

5. அவர் இறக்கும் நேரத்தில் அவரிடம் இருந்த செல்வம் அவரது மூக்கு   கண்ணாடி,செருப்பு, கதர் ஆடை மற்றும் ரூபாய் 150/-. அவரது அமைச்சர்களும் அவரை போல் எளிமையாக இருந்தனர். உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் தனது இறுதி கால மருத்துவ செலவிற்கு காசு இல்லாமல் ஏழைகளோடு ஏழையாக அரசு மருத்துவமனையில் இருந்தார் என்றால் நம்ப முடிக்கிறதா?

இன்னும் கூறி கொண்டே போகலாம் காமராஜர் பற்றி. அவர் அலங்கரித்த சட்டமன்ற வளாகத்தையும், நாடாளுமன்ற வளாகத்தையும், இன்றைய ஊழல்வாதிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்று நினைக்கும் பொழுது வெறுப்பாக உள்ளது. மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் (இவர் சன் அதிபர் கலாநிதி மாறனின் தந்தை) இலவச சிகிச்சை பெற வேண்டி தனது இறுதி வருடங்களை இலாகா இல்லாத அமைச்சராக கழித்தார். இவர் எங்கே நம் காமராஜர் எங்கே?. கருணாநிதியோ 87 வயது ஆகியும் முதல்வர் பதவியை விடாமல், தமிழ் நாட்டினை தன் குடும்பத்திருக்கு பங்கிட்டு கொடுத்தார். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சட்டமன்றத்தை ஒரு சவால் விடும் களமாக மாற்றிய பெருமை படைத்தவர்கள். இவர்கள் தான் காமராஜர் ஆட்சி தருவதாக பேசி கொண்டு இருக்கும் இன்றைய அரசியல்வா(வியா)திகள். ஜெயலலிதாகளும், கருணாநிதிகளும் மாறி மாறி வந்தும் தமிழகம் இன்னும் மூழ்காமல் இருக்க காமராஜர் அமைத்த வலுவான அடித்தளமே காரணம். நாடு முன்னேற நாளும் உழைத்தவர் காமராஜர், இன்றைய அரசியல்வாதிகள் நாடு முன்னேற ஒரு நாளேனும் உழைத்து இருந்தால் நம் தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலமாக என்றோ மாறி இருக்கும்.

காமராஜரின் வரலாறு அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது வரலாற்றினை படித்து முடித்த பின்னர் நாமும் இந்த நாட்டுக்கு கண்டிப்பாக நம்மாலானவற்றை செய்ய வேண்டும் என்ற ஒரு உத்வேகம் தோன்றும். நம் குழந்தைகளுக்கும் நாம் கட்டாயம் கற்று கொடுக்க வேண்டிய பாடம் காமராஜரின் வரலாறு.

காமராஜர் இறுதி வரை கல்யாணம் செய்யாமல் இருந்து இருக்கலாம், ஆனால் அவரே நம் தமிழகத்தின் தந்தை!!.

இறுதியாக காமராஜர் குறித்து நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய காணொளிகளுடன் இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.







6 comments:

  1. Nice and thought provoking one.

    ReplyDelete
  2. நல்லாயிருக்குன்னேன்!

    Kamarajar is an ideal case and no one can reach his heights.

    Note:
    "சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு இருந்த ஆர்வம் கூட நமக்காக உழைத்த தலைவர் பற்றி தெரிந்து கொள்ளவதில்லையே..."

    Good to see this from Covaiveeran! Shows you are changing ;)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...