Friday, February 1, 2013

மாய உலகம்


என் விழித்திரையில் விழும் காட்சிகள்,
என் நரம்பு மண்டலம் உணரும் உணர்ச்சிகள்,
என் செவி மடல் கேட்கும் ஒலிகள்,
இவை மட்டும் தான் நிஜமோ?
மற்ற அனைத்தும், அனைவரும் மாயையோ?
என் குடும்பத்தாரும், நண்பர்களும் கூட மாயையோ?
இல்லையெனில், ஏனையோரின் உணர்ச்சியை
ஏன் என்னால் உணர முடியவில்லை?
அவர்களின் உலகத்தை ஏன் என்னால் காண முடியவில்லை?
மாயையெனில், நான் மட்டும் இந்த உலகத்தில் தனியோ?
உலகத்தில் அனைத்தும் எனக்காகப் படைக்கப்பட்டதோ?
உலகத்திற்கு என்னைத் தனியாக அனுப்பிய
கடவுளின் நோக்கம் தான் என்னவோ?
இல்லை இந்த கேள்விகள் எல்லாம் நான் பித்துப்பிடித்தவனாக
மாறிக் கொண்டு இருக்கிறேன் என்பதற்கான அறிகுறியோ?
இந்த கேள்விகளுக்கு பதில் தருவோர்
யாருமுண்டோ இந்த உலகத்தில்.... மாய உலகத்தில் !!

ஓட்டம்


சிறுவயதில் விளையாட்டை மறந்து
தரவரிசை(ரேங்க்) நோக்கி ஓட்டம்,
பருவ வயதில் சுயவிருப்பத்தை மறந்து
 'காகித' பட்டம் நோக்கி ஓட்டம்,
பட்டம் பெற்றவுடன் படித்த படிப்பை மறந்து
'கணினி' வேலை நோக்கி ஓட்டம்,
பின் குடும்பத்தைப் பிரிந்து
பதவி உயர்வு நோக்கி ஓட்டம்,
இன்று தாய்நாட்டை துறந்து
பணத்தை நோக்கி ஓட்டம்,
எதற்காக இந்த தொடர் ஓட்டம்?
யாருக்காக இந்த ஓட்டம்?
எதை நோக்கி இந்த இலக்கிலா ஓட்டம்?
எங்கே நிற்கும் இந்த ஓட்டம்?
Related Posts Plugin for WordPress, Blogger...