Sunday, May 12, 2013

சங்க இலக்கியச் சுவையைத் தேடி முதல் படி...

என் வலைப்பதிவு தொடங்கிய பொழுது சங்க இலக்கியம் குறித்து
பதிவு எழுதும் அளவிற்கு வருவேன் என்று நினைக்கவில்லை.

பள்ளியில் சங்கப் பாடல்களை படிக்கும் பொழுது, மதிப்பெண் பெற வேண்டும் என்று நோக்கத்தில் மனப்பாடம் செய்தேனே தவிர ரசித்தோ, புரிந்தோ படிக்கவில்லை. " சங்கப் புலவர்கள் அவங்க பாட்டுக்கு எழுதிவிட்டு போய்ட்டாங்க யார் மனப்பாடம் செய்து எழுதுவது" என்று பல நேரங்களில் சங்கப் புலவர்களை கூட கடிந்து கொண்டது உண்டு. ஆண்டு தோறும் முப்பது குறள்களை மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற காரணத்தினால் திருவள்ளுவரை கூட கடிந்து கொண்டது உண்டு.(தமிழ் அறிஞர்கள் என்னை மன்னிக்கவும் :)).

ஆனால் இன்று திரும்பி பார்க்கும் பொழுது இவ்வளவு செழுமையான இலக்கியத்தை நான் எப்படி ரசிக்காமல் இருந்தேன் என்று நினைத்தால் சற்று வெட்கமாக இருக்கிறது. மதிப்பெண்ணை குறிவைத்தே ஓடியதால் சங்க இலக்கியத்தின் செழுமையை காணத் தவறி விட்டேன்.  இன்றோ மதிப்பெண் இல்லை, பரீட்சை இல்லை, தேடல், ஆர்வம் மட்டும் உள்ள காரணத்தினால் சங்க இலக்கியத்தின் செழுமையையும்,  அதில் இருக்கும் இனிமையும் உணர முடிகிறது.

எனது நண்பர் கிரேஸ் அவர்கள் கொடுத்த ஊக்கமும், அவரது சங்க இலக்கியம் குறித்தப் பதிவுகளும், எனது இந்த மாற்றத்திற்கும், என் தமிழ் தேடலுக்கும் மிக முக்கிய காரணம். எனவே, அவருக்கு என் நன்றிகளை கூறிக் கொண்டு,  முனைவர் இரா. ருக்மணி அவர்கள் எழுதிய "முல்லைப் பாட்டும், பண்டைத் தமிழகமும்"  என்ற புத்தகத்தின் மூலம் நான் ரசித்த முல்லைப்பாட்டிலிருந்து எனக்குப் பிடித்த சில பாடல்களை, விளக்கவுரையுடன் இங்கு பகிர்கிறேன், உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு :)

ஆசிரியர் - நப்பூதனார்
கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்
  .................................................................அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால
கோடல் குவி முகை அங்கை அவிழ
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் 


விளக்கவுரை  -
முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக்
கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், மலர் இதழ் நிறைந்த செங்காந்தள் உதிரம் நிறத்தில் மலர்ந்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடும். இத்தகைய முல்லைநிலத்து, எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில்.

மலர்ந்து மணம் வீசும் காயா, செங்காந்தள் போன்ற மலர்கள் மூலம் முல்லை நிலத்தின் அழகையும், தவறாமல் பெய்யும் மழையினால் விளைந்த கதிர் மூலம் முல்லை நிலத்தின் செழுமையும், துள்ளித் திரியும் மான்கள் மூலம் முல்லை நிலத்தில் குடி கொண்டுள்ள மகிழ்ச்சியையும் ஒரு சேர அழகாக எடுத்தக் காட்டுகிறது இந்த அற்புதமான பாடல்.

மற்றுமொரு என் மனம் கவர்ந்த பாடல்...

பாசறையில் காவலாளர்
நெடு நா ஒண் மணி நிழத்திய நடு நாள்
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசை வந் தாங்கு
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ   விளக்கவுரை 
நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமம்.அப்பொழுதில் காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள்,  நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல – தலையில்  தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்  தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு பாதுகாவலைச் செய்தனர்.

உழைத்து களைத்த காவலரின் நிலையை காற்றில் ஆடும்
மல்லிகை கொடியுடன் உவமைப்படுத்திய ஆசிரியர் நப்பூதனாரின் கற்பனையை என்னவென்று சொல்வது.  வகுப்பறையில் எனது நிலைமையை நினைவுப் படுத்திவிட்டார். :)

மேலும் முல்லைப்பாட்டின் பல பாடல்களையும், அதற்கான விளக்கவுரைகளையும் இந்த தளத்தில் http://learnsangamtamil.com/mullaipattu/ காணலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...