Tuesday, December 23, 2014

கனவில் வந்த காந்தி


கிரேஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என் கனவிலும் வந்தார் காந்தி.  அவரும் நானும் பேசிய உரையாடல் கீழே..

1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?
மறுபிறவியா?.. இதுவே எப்ப மூட்டைய கட்டுவோம்னு இருக்கு.. மறுபிறவி வேண்டாம் ஐயா !!... தப்பித்  தவறி பிறந்தாத் தமிழனாகவே பிறக்க வேண்டும். 

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
ஹம்ம்.. அப்படியும் நடக்குமோ??.. தவறி நடந்தால்..
என் முதல் வேலை  அரசு பள்ளிகளின் கல்வி தரத்தையும், ஆரம்பச் சுகாதார மையங்களின் தரத்தையும் உயர்த்துவதுமாக இருக்கும்.
அடுத்து, அமெரிக்காவில் இருப்பது போல, அனைத்து பள்ளிகளிலும் (தனியார் பள்ளி உள்பட) தொடக்க பள்ளிக் கல்வி இலவசமாகத் தர முயற்சி செய்வேன். பின்பு, அனைத்து நதிகளையும் இணைக்கச் முயற்சி மேற்கொள்வேன்.

3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்?
மக்களுக்கு பயன்படும் திட்டம் எதுவாயினும் இந்தியர்கள் அனைவரும் வரவேற்பர். இதில் வெளிநாட்டு இந்தியர் விதிவிலக்கு இல்லை என்று உறுதியுடன் நம்புகிறேன். ஒருவேலை அவர்கள் எதிர்த்தால், அதற்கான காரணத்தை கேட்டு அறிந்து, அது சரியான காரணமாக இருக்கும் பட்சத்தில் அதை கருத்தில் கொண்டு அவர்களது பயத்தினை நீக்க முயற்சி செய்வேன்.

4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?
முதியோருக்கான சலுகைகள் அனைத்தும் அலைச்சல் இன்றி, முடிந்தவரை, அவர்கள் வீடு சென்று சேரும் வகைளில் பார்த்துக் கொள்வேன்.
வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதி, போக்குவரத்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களும் முதியோர்களின் வசதியை மனதில் கொண்டு இயங்கும் படிச் செய்வேன்.

5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?
மக்கள் தேவையே தங்களின் முதல் தேவை என்பதை அனைத்து அரசியல்வாதிகளும் உணர வேண்டும். அதற்கு, முதற்படியாக அனைவரும் அவர்களது தொகுதியில் தங்கும் படிச் செய்வேன். பின்பு, அத்தொகுதி பொது மக்களின் மனுவை கணினியில் ஏற்றி, அவற்றை கண்காணித்து, அதன் மூலம் அரசியல்வாதியின் செயல்  திறனை  முறையாக அறிந்து, அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் மறுபரிசீலனை செய்ய வழி வகைச் செய்வேன்.

6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?
உண்மையில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்று நினைக்கும் பட்சத்தில் நீதி மன்றம் செல்வதில் தவறு இல்லை. ஆனால் நம் நீதி மன்றங்களை நம்பி போனால், நாம் பேரன், பேத்தி பெற்ற பின் தான் தீர்ப்பு வரும். எனவே நீதி மன்றத்தை மட்டும் நம்பி இருக்காமல், மதிப்பெண்ணை விட நம் மதியை பெரிதென மதிக்கும் இடம் நோக்கி செல்ல அறிவுறுத்துவேன்.

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?
நம் சங்க இலக்கியத்திலும், பண்டைய சமஸ்கிருத வேத நூல்களிலும் புதைந்து உள்ள அறிவியலை, மொழி வல்லுனர்கள் துணை கொண்டு படித்து அறிந்து, நம் இந்தியா ஒளிர, நம் மக்கள் சிறக்க, படைப்புகள் படைக்க நம் விஞ்ஞானிகளுக்கு வழி வகை செய்வேன்

8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?
மக்களுக்கு பயன்படும் திட்டத்தை யாரும் நிறுத்த துணிய மாட்டார்கள். மக்களும் விடமாட்டார்கள்  என்று நம்புகிறேன்.

9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?
இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும் என்ற பதிவில் நான் கூறி உள்ளது போல சமூகத்தின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட காலத்திற்கு (5 ஆண்டோ, 10 ஆண்டோ)ஒரு முறை அறிந்து, அதற்கேற்ப அச்சமூகத்திற்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் திட்டத்தை செயல் படுத்துவேன்.

10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?
மானிட பிறவி அல்லாத பிறவியா?...அப்படினா ஏதோ ஒரு வகை பறவையாக பிறக்க ஆசை. பறவைகளைக் மீது எப்பொழுதும் ஈர்ப்பு உண்டு.  பறவையாகப் பிறந்து, இயற்கையோடு வாழ்ந்து, வான் உயரப் பறந்து, உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை 

4 comments:

 1. நல்ல சிந்தனைகளுடன் பதில்கள் அளித்துள்ளீர்கள் நன்றி நண்பரே,,,

  எனது பதிவை அல்ல, பதிலை காண அழைக்கிறேன்...

  http://www.killergee.blogspot.com/2014/11/1.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. இதோ பார்க்கிறேன் :)

   Delete
 2. நன்றி ஸ்ரீனி...பதில்கள் அருமை..9, 10 மிகப் பிடித்தது

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரேஸ் :)

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...