Wednesday, November 28, 2012

இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும்

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு - இன்று பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடயம். முதலில் இடஒதுக்கீடு கொண்டு வந்தற்கான காரணத்தைப் பார்போம். Dr.அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனம் வகுத்த பொழுது பல்வேறு துறைகளிலும் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். நம் முன்னோர்கள் தொழில்வாரியாகச் சமூகத்தினை பல பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு வந்தனர். காலப்போக்கில் சில சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து, சில சமூகத்தினரை உயர் சாதி எனவும், வேறு சிலரை கீழ் சாதி எனவும் பார்க்கும் பழக்கம் உருவானது. ஆங்கிலேய ஆட்சியில் இந்த வேற்றுமை பன்மடங்கு பெருகியது. இதன் காரணமாகச் சில பிரிவு மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாகவே இருந்து வந்தனர். எனவே, சுதந்திரம் அடைந்தவுடன் இந்த நிலை மாற, அனைவரையும் ஒரே நிலைக்கு கொண்டு வர இடஒதுக்கீடு Dr. அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்பட்டது.

நாம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகிய இன்றைய சூழலில் இது தேவையானதா?என்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை இது தேவையானதே.

இன்றளவும் நம் சமூகத்தில் சாதி அடிப்படையில் ஒரு பிரிவு மக்களை அடக்கி ஆளும் அசட்டுத்தனம் இருக்கத்தான் செய்கிறது. நகர்புறங்களில் ஒரு அளவு குறைந்து இருந்தாலும், கிராமப்புறங்களில் வெகுவாக இருக்கத்தான் செய்கிறது. எனவே,அவர்கள் மேலே ஏறி வர, வெளி உலகம் பற்றி அறிய, தங்கள் ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து போராட இடஒதுக்கீடு என்ற துணை அவர்களுக்குத் தேவை. பல நேரங்களில் இடஒதுக்கீட்டின் பயன்பாட்டை நாம் காணத்தவறுகின்றோம். இடஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைத்து என்னுடன் பயின்ற நண்பர்கள் பலர் இன்று நல்ல நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் பெற்ற தகுதி மதிப்பெண் குறைவாக இருந்து இருக்கலாம். ஆனால் அவர்கள் வந்த சூழலைப் பற்றி அறியும் பொழுது தான் அவர்கள் மதிப்பெண்னின் உண்மையான மதிப்பை உணர முடிகிறது. இது போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மேலே வருவது அவர் சார்ந்த சமூகத்திற்கு ஒரு உத்வேகத்தை தரும். அந்த சமூகமே முன்னேற அது ஒரு வாய்ப்பாக அமையும். அனைவரையும் ஒரு தளத்தில் வைத்துப் பார்க்கும் நாள் வரும் வரையில் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும்.

இவ்வளவு வலிமை வாய்ந்த இடஒதுக்கீடு என்ற சக்தி இன்று சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை எனபதே கசப்பான உண்மை. அதன் காரணமாகவே பலரும் இடஒதுக்கீட்டிற்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர். இடஒதுக்கீட்டை வைத்து சமூகத்தை முன்னேற வழிவகை காணாமல், அதை வைத்து ஓட்டு வங்கியை பெருக்கும் அரசியல் தான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. இடஒதுக்கீடு அமலில் இருந்து 65 ஆண்டுகளாகியும், இடஒதுக்கீட்டினால் பயன்பெற்றவர்கள் ஏராளமாக இருந்தும், இடஒதுக்கீடு குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இடஒதுக்கீட்டை பிறப்புரிமை போல பலரும் கருதுவது. தங்கள் சமூகம் வளர்ச்சி அடைந்த பின்னரும் தங்களுக்கான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய எவரும் தயாராக இல்லை.

எனவே, அரசே முன் வந்து ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட காலத்திற்கு (5 ஆண்டோ, 10 ஆண்டோ)ஒரு முறை அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு மக்கள் நலன் ஒன்றே பேணும் தலைவர்கள் நம்மிடையே உருவாக வேண்டும். பொதுமக்களாகிய நாமும் நமக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கும், இடஒதுக்கீடுக்கும் நாம் தகுதியுடையவரா? என்று சுயபரிசோதனை செய்து அதற்கேற்ப செயல்பட்டால் இடஒதுக்கீட்டின் பயன்பாட்டினை நம் சமூகம் முழுமையாக உணர முடியும்.

மாறாக இவை நடக்காவிட்டால்,இடஒதுக்கீடு வழங்கியதற்கான
நோக்கம் அடிப்பட்டு, சமதர்ம சமத்துவ சமுதாயம் என்றுமே ஒரு எட்டாக்கனியாகவே இருக்கும். இடஒதுக்கீட்டின் சக்தியை உணர்ந்து, அதனை ஒழிக்க முனையாமல், அதனை சீர்திருத்த முயல்வோம். அதன் மூலம் சமதர்ம சமத்துவ சமுதாயம் உருவாக்குவோம் !!

Wednesday, October 31, 2012

நவீன நவரசம்



மின்வெட்டு குறித்து நமது முதல்வரும், முன்னாள்
முதல்வரும் பேசும் பேச்சைக் கேட்கும்
பொழுது நகை உணர்வு,

மின்வெட்டு காலத்திலும் வரும் மின் கட்டணம்
பார்க்கும் பொழுது அழுகை உணர்வு,

மின்வெட்டுக்கு காரணமான ஆட்சியாளர்களைப் பற்றி
பேசும் பொழுது இளிவரல் (இகழ்ச்சி) உணர்வு,

மின்வெட்டால் பாதிக்கப்படும் சிறு தொழிலாளர்களை
நினைக்கும் பொழுது மருட்கை(மயக்க) உணர்வு,

இன்னும் எத்தனை நாள் மின்வெட்டு நீடிக்கும் என்று
நினைக்கும் பொழுது அச்ச உணர்வு,

'கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தா சரியாகிவிடும்' என்று ஆட்சியாளர்கள் கூறியதை நம்பியதை நினைக்கும்
பொழுது வெகுளி உணர்வு,

நமக்கு மின்சாரம் இல்லாத போதும், நமது தொகுப்பில் இருந்து
அண்டைய மாநிலத்திற்கு செல்லும் மின்சாரத்தை குறைக்காமல்
இருப்பதை நினைக்கும் பொழுது பெருமித உணர்வு,

போன மின்சாரம் திரும்பி வரும் பொழுது
உவகை (மகிழ்ச்சி) உணர்வு,

என்றுமே மின்வெட்டில் இருக்கும் பல்லாயிரம்
மக்களைப் பற்றி நினைக்கும் பொழுது அமைதி உணர்வு,

என நவரசத்தையும் தருகிறது (தமிழக) மின்சாரம் !!

Thursday, October 25, 2012

மழை


மேகங்கள் தாளமிட, மின்னல் வான வேடிக்கைகள் படைக்க,
சூரியன் பூமியை வானவில் கொண்டு அலங்கரிக்க,
பூமி நோக்கி வரும் மழை என்னும் வெள்ளித்துளி
கடவுள் நமக்கு அருளிய வரம்.
அனைத்து உயிர்களின் உயிர் நாடி..
இதை அறிந்ததனால் தான் என்னவோ,
மழையினை கானமயில் ஆடி வரவேற்கிறது.
பூச்செடிகள் பூத்துக்  குலுங்கி வரவேற்கின்றன.
மான்கள் துள்ளி ஓடி வரவேற்கின்றன.
ஆனால் ஆறறிவு மனிதர்களாகிய நாம்
மழை கண்டு ஓடி ஒளிகின்றோம்,
மழை நீரை சேமிக்க மறுக்கின்றோம்,
இதனை அறிந்திருந்ததனால் சூரியன் நீர் நிலைகளிலிருந்து
நீரினை ஆவியாக்கி மேகங்களாக சேமித்துக்கொள்கிறது.
இவை, பின் குளிர்வடைந்து மழையாக வருகிறது.
ஆனால் இன்று நாம் மரங்களை வெட்டியும்,
காடுகளை அழித்தும், பூமி குளிரடைவதை
தடுத்து மழை வருவதை தடுக்கின்றோம்.
பின் தண்ணீர் கேட்டு மற்றவர்களிடம் சண்டை இடுகின்றோம்.
சற்று சிந்திப்போம், மழை நீரின் மகத்துவத்தை உணர்வோம்...
மரம் வளர்ப்போம்...மழை பெறுவோம்..
மழை பூமிக்கு வரும் பொழுது ஓடி ஒளியாமல்
வரவேற்போம்.. மகிழ்ச்சியுடன் இருப்போம் !!

(நண்பரின் குழந்தை பள்ளியில் கூறுவதற்காக எழுதியது.  இவ்வளவு பெருசா இருக்கே, ஒரு குழந்தைகிட்ட போய் வீரத்தை காட்டுறியே, பாவம் அந்த குழந்தைனு நீங்க நினைக்கிறது புரிகிறது :-))

Friday, September 7, 2012

நாம் பேசும் தமிழ் (?!)

புருக்பீல்ட்ஸ் (Brookefields) மாறி வரும் கோவையின் புதிய அடையாளம். இந்த மாற்றத்தில் மிக முக்கியமான ஒன்று கொங்கு தமிழுக்கு சாவு மணியடித்து விட்டு ஆங்கிலத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது. அதற்கு உதாரணமாக நிற்கிறது புருக்பீல்ட்ஸ்.


புருக்பீல்ட்ஸ் - கோவைக்கு விஜயம் செய்து இருக்கும் ஒரு வணிக-கேளிக்கை வளாகம் (Multiplex). சென்ற வாரம் தான் புருக்பீல்ட்ஸ் போக நேர்ந்தது, வழக்கம் போல தனியாகத் தான் :-). புருக்பீல்ட்ஸை நெருங்க நெருங்க, 'புருக்பீல்ட்ஸ்' என்ற 'ஆங்கில' எழுத்துக்கள், மின் விளக்கின் ஒளியால் மின்னி, என்னை வரவேற்றது. ஆம், கோவை இங்கிலாந்தில் அல்லவா இருக்கிறது. இங்கு ஆங்கிலம் மின்னினால் தான் மரியாதை. தமிழ் மின்னினால் அவர்கள் மரியாதை என்னாகும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் என் கண்ணில் பட்டவை குறியீடுகள். அனைத்து குறியீடுகளிலும் ஆங்கிலம் (ATM, Lift Lobby, Staircases, Escalator, More shops etc). தவறிக்கூட தமிழ் இருக்கக் கூடாது என்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பது தெரிந்தது. கோவை தமிழகத்தின் ஒரு பகுதி என்று எனது புவியியல் ஆசிரியர் தவறாகச் சொல்லி கொடுத்து இருக்கிறார் என்பது புலனானது.

ஆர்.எம்.கே.வீ சில்க்ஸ், ரிலையன்ஸ் டிறேண்ட்ஸ் ஆகிய கடைகள் தவிர நான் சென்ற அனைத்துக் கடைகளிலும் என்னிடம் பேசிய முதல் மொழி (அரைகுறை) ஆங்கிலம் தான் (Do you need help?, What mode of payment Debit or Cash?, Do you need a carry bag?, This cost 500 rs). இறுதியாக 'தி சினிமாஸ்' (சதயம் சினிமாஸ் இன் கோவை கிளை) சென்றேன். அங்கும் அதே நிலைமை. நான் தமிழில் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் வந்தது ஆங்கிலத்தில். நான் என்ன பார்க்க வெள்ளைக்காரன் மாதிரியா இருக்கேன்?. முதலில் தமிழில் பேச வேண்டியது தானே அப்புறம் கேட்பவருக்குப் புரியவில்லை என்றால் வேறு ஓர் மொழிக்கு மாற வேண்டியது தானே?. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவர்களின் முதலாளிகள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று கூறி இருப்பார்கள் போலும்.

நம்மவர்கள் எப்பவும் நினைப்பது பகட்டான இடங்களுக்கு சென்றால் ஆங்கிலத்தில் (அரைகுறை என்றால் கூட) பேசினால் தான் மரியாதை என்று. எனவே கடை முதலாளிகளும் தங்களை பகட்டாக காட்டிக் கொள்ள ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள். புருக்பீல்ட்ஸ் உம் இதற்கு விதிவிலக்கல்ல. வெகுவாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்த இந்த பழக்கம் சிறு நகரங்களில் ஊடுருவி, இன்று கிராமங்கள் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலைக்கு நாம் அனைவரும் காரணம். ஒரு மொழி நீடித்து வாழ அந்த மொழி பாமரனிடம் வாழ வேண்டும். ஆனால் தமிழ் இன்று பாமரனிடம் அழிந்து கொண்டு இருக்கிறது. நாம் நடைமுறையில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது அம்மா அப்பா பயன்படுத்தும் பல சொற்களை இன்று நம் பேச்சு மொழியில் பயன்படுத்துவது கிடையாது (வலது, இடது, தமிழ் மாதங்கள், திசைகள் இன்னும் பல). இது தொடர்ந்தால் அடுத்து வரும் சந்ததியினர் சொற்களைத் தாண்டி நம் மொழியினையே பயன்படுத்தாமல் நிறுத்தி விடுவார்கள்.

அந்த ஒரு அவல நிலை வராமல் தடுக்க நாம் முடிந்த வரை தமிழில் பேசுவோம். அதற்காக தமிழ் புலவர்களாகச் சொல்லவில்லை. "இவன் என் Friend" என்று சொல்லும் இடத்தில் "இவன் என் நண்பன்" என்று சொல்லலாம். "Thanks" என்று சொல்வதற்கு பதில் "நன்றி" என்று சொல்லலாம். கைபேசி எண் சொல்லும் பொது ஒன்று, இரண்டு என்று தமிழில் சொல்லலாம். இது போன்று நம் நடைமுறை வாழ்க்கையில் வெறும் பகட்டுக்காக பேசும் ஆங்கிலச்சொற்களை தவிர்த்து தயக்கமின்றி தமிழ் சொற்களை பயன்படுத்துவோம். முடிந்த வரை தமிழில் பேச முயற்சிப்பவரையும் 'தமிழ காப்பாத்த வந்துட்டான்டா' என்று ஏளனம் செய்யாமல், அவர்களை உற்சாகப்படுத்துவோம்.

தமிழக அரசும், தமிழ் அறிஞர்களும் தமிழுக்கு என்று மாநாடுகள் நடத்துவதோடு நில்லாமல் உலகின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழாக்கம் கொடுத்து, அவற்றை அகராதியில் ஏற்றி அனைத்து தமிழன் கையில் போய் சேரும் படி செய்ய வேண்டும்.

இவை எல்லாம் நடந்தால் புருக்பீல்ட்ஸ்களிலும் தமிழ் வாழும். இதை செய்ய தவறினால் தமிழ் சமஸ்கிருதம் வழி சென்று வெறும் ஏட்டு மொழியாக மாறும். முடிவு நம் கையில் இல்லை இல்லை நம் நாவில் !!.

Monday, August 13, 2012

விழித்து எழு தமிழா !!

உலகின் முதல் கப்பல் படை, யானைப்படை நிறுவி,
போர்கள் பல வென்று தரணி ஆண்ட எம் தமிழினம் !!
பொது மறையாம் திருக்குறள் தந்து உலகினுக்கு 
வாழ்க்கை நெறியை கற்று தந்த எம் தமிழினம் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோள்களின்  
அமைப்பையும், தாக்கத்தையும் அறிந்திருந்த எம் தமிழினம் !!
ஓர் அறிவு உயிர், ஈர் அறிவு உயிர் என தொல்காப்பியம் மூலம் 
டார்வினுக்கு முன்னரே உயிரின் தோற்றத்தை 
கூறியிருந்த  எம் தமிழினம் !!
உலோகம் பற்றி  ஏனைய நாடுகள் அறியாத காலத்தில் 
அவற்றை கொண்டு அழகிய சிலைகள் தந்த எம் தமிழினம் !!
பெரிய கோவில், மகாபலிபுரம், மீனாட்சி அம்மன் கோவில் என
கட்டிடக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்த எம் தமிழினம் !!
அணுவின் சக்தி குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு 
முன்னரே  பாடிய எம் தமிழினம் !!
பல நூறு சித்தர்களையும், அவர்கள் மூலம்
சித்தவைத்தியத்தையும்  தந்த எம் தமிழினம் !! 
ஆதிவாசியாய் ஏனைய உலகம் இருந்த பொழுதும் 
(கல்)அணைக் கட்டி, யானை கொண்டு போரடித்து 
விவசாயம் செய்த எம் தமிழினம் !!
இன்னும்  எண்னில் அடங்கா  மேன்மை
வாய்ந்த எம் தமிழினம்  இன்று,
தன் முன்னே சொந்த சகோதர்(ரி)கள் சாகக்கண்டும், 
ஒன்றும் செய்ய இயலாத கோழை இனமாக மாறியது ஏனோ?
'அம்மா', 'அப்பா'வை விடுத்து, 'மம்மி'களையும், 'டாடி'களையும்,
அரவணைத்து கொண்டது ஏனோ?
தன் வாழ்க்கை நெறியை தவிர்த்து, மேற்கத்திய 
வாழ்க்கை முறைக்கு மாறியது ஏனோ?
அறிவு மழுங்கி மேற்கத்திய நாடுகளுக்கு உழைக்கும் 
அடிமைகளானது ஏனோ?
தமிழன் என்ற  கர்வத்தினை, இறுமாப்பினை இழந்து 
தமிழன் என்று சொல்லக்கூட  தயங்குவது ஏனோ?
10000 ஆண்டுகள் மேற்ப்பட்ட நம்  மேன்மையை, அறிவை. 
800 ஆண்டுகளே ஆக்கிரமித்த முகலாயர்களிடமும், 
ஆங்கிலேயர்களிடமும் பறி கொடுத்து விட்டோமா? 
இந்நிலை மாற வேண்டாமா? 
நம் அடிமை மோகம் தனிய  வேண்டாமா? 
இழந்த  மேன்மையை மீட்க வேண்டாமா? 
ஆழந்த நித்திரையில் இருக்கும் நாம்..
விழித்து எழுவோம்  !! வீறு கொண்டு எழுவோம்  !!
தமிழினத்தின் பெருமையை  ஆராய்ந்து அறிந்து 
உலகினுக்கு  உரக்கச் சொல்வோம் !!. 
இழந்த  மேன்மையை  அடைவதற்கான
இந்த முதல் படியினை எடுத்து வைப்போம் !!
தமிழைக் கற்று உணர்ந்து மேலும் மேன்மையடைய
இன்னும் பல சாதனை செய்வோம் !!
நம் மொழி தொன்மையானது என்ற பெருமையை
காத்து நம் சந்ததியினர்க்கு வழங்குவோம்!!
பின் விடியல் பிறக்கும்  நம் தமிழுக்கும்,  நம் தமிழினத்திற்கும் !!

Friday, July 6, 2012

இல்லறம்

என் நண்பனின் திருமணத்தை முன்னிட்டு நான் எழுதிய கவிதை




இரு கண்களில் ஓர் பார்வைத்  தோன்ற, 
இரு இதயங்கள் ஓர் உணர்ச்சியை உணர,  
இரு மனதில்  ஓர்  சிந்தனை உதிக்க, 
இரு மெய்யில்  ஓர்  உயிர் வாழத்  தொடங்க,
இரு பாதை ஓர் பாதையாக, 
இரு மனம்  ஒரு மனமாக,
உதயமானது நல்லறமான இல்லறம் !!

Friday, April 13, 2012

சவால்



இந்த தமிழ் புத்தாண்டு அன்று உங்களுக்கு ஒரு சவால் இந்த பாடலை 
தடை  இல்லாமல் படியுங்கள் பார்க்கலாம். என்னால் இதுவரை முடியவில்லை.  இப்பாடல் அருணகிரி நாதர் அவர்களின் கந்தர் அந்தாதியின் 54ஆவது பாடல்.  முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். 

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
 திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
 திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
 திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இந்த பாடல் ஒன்று போதும் நம் தமிழ் மொழியின் செழுமையை  உலகறிய.

Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு



அறம் தழைத்து,
செல்வம் செழித்து,
அறிவு மிளிர்ந்து, 
ஆரோக்கியம் சிறந்து,
இன்பம் பெருகி, 
மகிழ்ச்சி பொங்கி,
நந்தன வருடம், 
நந்தவனம் ஆகட்டும் !!

Thursday, March 1, 2012

எனக்கு பிடித்த பாடல் வரிகள்

எனக்கு பிடித்த பாடல் வரிகளின் தொகுப்பு... இந்த வரிகள் இப்போதைக்கு என் நினைவில் வந்த வரிகள் .. இது தொடர்ந்து புதுப்பிக்கப்படும் :-)

1. ராஜா ராஜ சோழன் படத்தில் - "தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே" பாடலில் வரும்

"நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க!
நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க!
தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க!
வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர்
விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க!"

2. தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே!

3. நான் கடவுள் - "பிச்சை பாத்திரம்" பாடலில் வரும்
"பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே !!"

4. ஆண்டவன் கட்டளை - "ஆறு மனமே ஆறு" பாடலில் வரும்
"நிலை உயரும் பொழுது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும் !!"

5. நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும்
"நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை !!
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றுமில்லை !!"

6. பாசம் படத்தில் வரும் M.G.R பாடல்
"உலகம் பிறந்தது எனக்காக !!
ஓடும் நதிகளும் எனக்காக !!
மலர்கள் மலர்வது எனக்காக!!"

7. அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாடல்
"புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை !!
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை !!"

8. புதிய பூமி - "நான் உங்கள் வீடு பிள்ளை" பாடலில் வரும்
"ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு!!"

9. சுமை தாங்கி - "மயக்கமா கலக்கமா" பாடலில் வரும்
"வந்த துன்பம் எதுவென்றாலும், வாடி நின்றால் ஓடுவதில்லை "
"நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து, நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு"
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு"

10. பணக்காரன் - "மரத்த வச்சவன் " பாடலில் வரும்
"காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு !!"

11. பாட்ஷா - "பாட்ஷா பாரு " பாடலில் வரும் (ரஜினிகாந்த் பற்றி)
"நூறு முகங்கள் மாறி வந்தும் ஏறு முகத்தில் இருக்கும் வீரன் தான்னடா !!"

12. பணம் படைத்தவன் - கண் போன போக்கிலே பாடலில் வரும்
"திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்து என்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

13. திருடாதே - 'திருடாதே பாப்பா திருடாதே" பாடலில் வரும்
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

14. ராமன் தேடிய சீதை - "மழை நின்ற பின்பும் தூறல் போல " பாடலில் வரும்
"கண் இமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே !!
உன் செவியில் விழவில்லையா?? உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே !!"

15. "பாவ மன்னிப்பு" படத்தில் வரும் ஜெமினி பாடல்
"காலங்களில் அவள் வசந்தம்....
கலைகளிலே அவள் ஓவியம்....
மாதங்களில் அவள் மார்கழி....
மலர்களிலே அவள் மல்லிகை...."

16. "பஞ்சவர்ணக்கிளி" படத்தில் பாரதிதாசன் எழுதிய அற்புதமான வரிகள் பாடல் வடிவில்
"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"

17. முத்து - "விடுகதையா இந்த வாழ்க்கை" பாடலில் வரும்
"பசுவினை பாம்பு என்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்"

18. தளபதி - "சின்ன தாய் அவள்" பாடலில் வரும் கதையே இரண்டு வரியில் கூறும் அற்புதமான வரிகள்
"தாய் அழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர"

19. சந்திரோதையம் - "புத்தன் இயேசு காந்தி பிறந்தது எதுக்காக" பாடலில் வரும்

"நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு,
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு,
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!!"

2o அண்ணாமலை - "வெற்றி நிச்சியம்" பாடலில் வரும்
"மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோசம்,
பாறைகள் நீங்கினால் ஓடைகில்லை சங்கிதம் !!"

21. காசேதான் கடவுளடா பாடலில் வரும்
"கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா !!"
"அளவுக்கு மேல பணம் வைத்து இருந்தால் அவனும் திருடனும் ஒன்றாவான்
!! "

22. "இரவும் பகலும் வரும்" பாடலில் வரும்

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் !!
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான் !!
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்று தான் !!

Friday, February 10, 2012

Marriage


Marriage - now am at a stage where my family have started looking for a bride for me. As the search is on, I thought I would record what I feel about it. Word marriage triggers couple of questions.

Whether I like to be married to be or not? - Well the answer is irrelevant, it is something that I can't certainly ignore or run away from. And I have face to it.

Whether am scared of marriage? - Hell, yeah very much scared. New family, New relation and above all responsibility of managing a family will I be able to do it??. Big question mark looms.. only time will tell.

So am trying to get mentally prepared for it. I don't have control over on who will god send to accompany me. So one thing I can do is try to be a ideal husband to whomever who will be joining me. So now the question what makes an ideal husband. Well, everybody would have their opinions and I have mine too. For every girl, their first hero will be her father, according to me an ideal husband would be a person who would be sitting alongside father in girl's heart. Now, how can I do it?. Hmm, I think if I can follow these points, may be I will have a good chance.

1. Respect her privacy
Yes..she is a wife and there shouldn't be any secrets between husband and wife. But it shouldn't happen in forcible manner. Trust should be built in way that she shares all the things. Till the trust is build, respecting her privacy is key. First she is a Ms.'X' and then Mrs.ME, so it is very important to understand this and give Ms.'X' that private space she needs.

2. Respect her interest
I may not be interested in something that she likes/loves. She might like painting which I may completely dislike. But it is very important for me not to belittle or demean her interests. Continuous ridiculing of her interests might lead to bad consequences.

3. Respect her financial independence
Whether she is working or not, she should have freedom to spend the money the way she is used to do before marriage. She shouldn't feel the need to go through approval process suddenly after marriage.

4. Respect her thoughts & opinion
Since she is wife, it doesn't mean that she has to agree with me on all the things. She can view things from a different perspective from what I view. It is very important to look from her view too and sort out matters instead of fighting on differences.

5. Respect her feelings
Sometimes for us a relation could be meaningless because of the person who made the relation. For example a teacher, for me a teacher had not any particular impact in my life. But for her a teacher could be the one who made her what she is. Since i didn't get a good teacher doesn't mean every teacher is like that. I as a person/husband should understand this difference and respect the feelings/affection she has towards the person/things that she values/loves.

6. Respect her Family, Friends
Though she has physically left her family, friends to come to partner me, the affection she would have towards her family, friends will remain intact forever. So it is very important for me to treat her family and friends the same way she would treat them.

By saying all this am not saying am the purest soul on the earth. There is mile difference between just writing down and following. Am pretty sure most of guys who got married wanted to follow these. Despite their best efforts, following these could have been difficult due to situations that they might have encountered. It also hugely depends on who would have partnered them. It is like going to exam well-prepared, whether you pass or fail depends on question paper that comes your way. So being well-prepared can only reduce the probability of failure and no way guarantee success. Am trying to be prepared and whether am able to follow this or not, only time will tell :-). However noting down these to record my thoughts before marriage, so i can revisit later to see if am following these.

Buckling up and hoping for the best :-)

Sunday, January 15, 2012

பொங்கல் நினைவுகள்

போகி பண்டிகை காலை 10 மணி. அன்று பள்ளி விடுமுறை என்பதால் மணி 10 ஆகியும் படுக்கையில் பிறண்டு கொண்டு இருந்தான் சீனி. சீனி ஆறாம் வகுப்பு படித்துக்  கொண்டு இருந்தான். "சீனி, மணி 10 ஆகுது இன்னும் என்னடா தூக்கம்? இன்னைக்கு வீடு clean பண்ணனும் வந்து help பண்ணுடா" என்று அவன் அக்கா லக்ஷ்மி அவனை எழுப்பினாள். "விடு லக்ஷ்மி அவன் தூங்கட்டும்" என்று சீனிக்கு ஆதரவாக அவன் அம்மா சரஸ்வதி களம் இறங்க, "அம்மா, நான் மட்டும் காலைல இருந்து help பண்ணறேன் இவன் மட்டும் நல்லா தூங்குறான்" என்று அவளது அம்மாவை திருப்பிக் கேட்டாள் லக்ஷ்மி. "அவன் எந்திரிச்சா மட்டும் என்ன பண்ண போறான், சும்மா அங்கையும் இங்கையும் சுத்திக்கிட்டு disturb பண்ணிக்கிட்டு தான் இருப்பான், அவன் தூங்குறதே நல்லது" என்ற அம்மா கூற, "கரெக்ட்'ல" என்று நினைத்து கொண்ட தன் 'cleaning' வேலைக்கு திரும்பினாள் லக்ஷ்மி. இது நடந்த சற்று நேரத்தில் நித்திராதேவி சீனியை விட்டு விலக, அவனுக்கு அன்றைய நாள் தொடங்கியது. அன்றைய நாள் முழுவதும் வீட்டில் நடக்கும் "கிளீனிங்" வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டும், உதவி என்ற பெயரில் தொந்தரவு செய்து கொண்டும் நாளை கடத்தினான். இரவானதும் அம்மா, அக்கா இருவரும் கோலம் போட்டு கொண்டு இருக்க சீனி வழக்கம் போல் அவர்களுக்கு 'உதவி' செய்து கொண்டு இருந்தான். அப்போது அவன் அப்பா கிருஷ்ணன் "சீனி, நீ போய் தூங்கு, நாளைக்கு காலைல பொங்கல், இன்னைக்கு மாதிரி 11 மணி வரை தூங்க கூடாது, சீக்கிரம் பொங்கல் வச்சுட்டு ஊருக்கு போகணும்". ஊருக்கு போகணும் என்று அப்பா சொன்னவுடன் சீனிக்கு சந்தோசம். சீனி அம்மா, அப்பாவின் சொந்த ஊர் குஜிலியம்பாறை. திண்டுக்கல் அருகில் ஒரு கிராமம். பொங்கலுக்கு அவர்கள் குடும்பத்துடன் அங்கு செல்வது வழக்கம். சீனிக்கு அங்கு செல்வது சந்தோஷமான ஒன்று. அங்கு அவனது சித்தப்பா மகன் மற்றும் மாமன் மகன்களுடன் விளையாண்டும், கோழிகளை விரட்டி கொண்டும், மாட்டு பொங்கல் அன்று பள்ளி ஆசிரியராக இருக்கும் அவனது சித்தப்பா நடத்தும் விளையாட்டு போட்டிகளை கண்டு கழித்தும் கூதுகலமாக சுற்றி திரிவான். அந்த சிந்தனையுடனே சீனி தூக்கத்தில் ஆழ்ந்தான்.

பொங்கல் நாள் காலை 5 மணிக்கு "சீனி, எந்திரி time ஆச்சு, சாமி கும்பிட்டு ஊருக்கு கிளம்பனும், நாங்க எல்லாம் பாரு ready ஆயிட்டோம்" என்று சீனியை எழுப்பினார் அவனுடைய அப்பா. ஊருக்கு போறோம் என்ற சந்தோஷத்தில் மட மட என கிளம்பினான் சீனி. மொட்டை மாடியில் சூரியன் உதிக்கும் தருவாயில், மண் சட்டியில் சீனியின் அம்மா பொங்கல் வைக்க, அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கூவினர். பின்னர் 8 மணிக்கெல்லாம்
குஜிலியம்பாறைக்கு பயணப்பட்டனர் சீனியும் அவனது குடும்பமும். கோயம்புத்தூர்இல் இருந்து குஜிலியம்பாறை போய் சேர 5 மணி நேரம் ஆகியது. போய் சேர்ந்த உடன் நடந்து கொண்டு இருந்த சேவல் சண்டையை பார்க்க ஓடினான். அப்போது அவனது அப்பா, "சீனி, வந்தவுடன் போகாட்டி என்ன? கொஞ்சம் நேரம் கழிச்சு போ" என்று கூறியும் அப்பாவின் சொல்லை கேளாமல் ஓடினான். சேவல்கள் மோதி கொள்ளும் காட்சியையும், அவை சண்டைக்கு தயார் செய்யப்படும் விதத்தையும் பிரம்மிப்பாக பார்த்து கொண்டு இருந்தான். அதன் பின்னர் தோட்டத்திற்கு சென்று கேணியிலும், வயல்காலிலும் விளையாடலனான். அதன் பின் இருட்ட ஆரம்பித்தால், வீட்டுக்கு திரும்பினான்.அடுத்த நாள் மாட்டு பொங்கல் தினம், சீனியின் சித்தப்பா பொறுப்பேற்று நடத்தும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம் ஆகின. சீனி எந்த போட்டியிலும் பங்கேற்க்கவில்லை என்றாலும் அனைத்து போட்டிகளை ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தான். கபடி, 'Slow சைக்கிள்', கல் எறிதல், கண்ணை கட்டி சட்டி உடைத்தல், பாட்டு போட்டி, வினாடி வினா என போட்டிகள் அன்று முழுவதும் நடந்து கொண்டு இருந்தது. அனைத்தையும் ஆர்வமாக பார்த்தான் குறிப்பாக கபடி போட்டியினை மிகவும் ரசித்தான். போட்டிகள் முடிந்து பரிசுகள் கொடுத்தவுடன் அன்றைய தினம் முடிவுக்கு வந்தது.

அடுத்த நாள் காலை 8 மணி, சீனியின் அப்பா - "சீனி, 10 மணிக்கு
நாம் கோயம்புத்தூர் கிளம்புறோம்" என்றார். "அப்பா, நாளைக்கு போலாம் அப்பா" என்றான் சீனி. "இல்லை சீனி, உனக்கு school இருக்கு இன்னைக்கு போனா தான் correcta இருக்கும்" என்று அவர் கூற வேறு வழி இல்லாமல் அதை ஏற்று கொண்டான். அன்று காணும் பொங்கல் என்பதால் பேருந்தில் கூட்டம் அலை மோதியது. இதை பார்த்து அப்பா முடிவு மாறாதா? என்று சீனி நினைத்து கொண்டு இருந்தான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்காததால் பேருந்தில் ஏறி கோயம்புத்தூர்க்கு ஆன அவனது பயணம் தொடங்கியது.

"பாம் !!
பாம் !!" என்ற 'horn' சத்தம் .

"டேய், என்னடா
யோசிச்சுக்கிட்டு இருக்க?, signal போட்டு 5 mins ஆச்சு. Horn அடிக்கிறாங்க, காரை எடு, conferenceக்கு வேற time ஆச்சு" என்று சீனி பக்கத்தில் இருக்கும் அவன் நண்பன் கூற, நினைவு உலக பேருந்து பயணத்தில் இருந்து நிஜ உலக கார் பயணத்துக்கு வந்தான் சீனி, "CovaiVeeran Aviations" என்ற கம்பெனி'இன் CEO. அவனுக்கு வயது 34. "இன்னைக்கு பொங்கல், சின்ன வயசுல எவ்வளவு நல்லா 'celebrate' பண்ணினோம், இப்ப எல்லாம் ஒரு festive spiritae இல்லை. பொங்கல் is just another day" என்று நினைத்து கொண்டே தனது 'BMW' காரினை அழுத்தினான். அந்த கார் சிட்டாக பறந்து 'Concrete jungle'இல் மறைந்தது.

(பின்குறிப்பு - இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே :-))


Related Posts Plugin for WordPress, Blogger...