புருக்பீல்ட்ஸ் - கோவைக்கு விஜயம் செய்து இருக்கும் ஒரு வணிக-கேளிக்கை வளாகம் (Multiplex). சென்ற வாரம் தான் புருக்பீல்ட்ஸ் போக நேர்ந்தது, வழக்கம் போல தனியாகத் தான் :-). புருக்பீல்ட்ஸை நெருங்க நெருங்க, 'புருக்பீல்ட்ஸ்' என்ற 'ஆங்கில' எழுத்துக்கள், மின் விளக்கின் ஒளியால் மின்னி, என்னை வரவேற்றது. ஆம், கோவை இங்கிலாந்தில் அல்லவா இருக்கிறது. இங்கு ஆங்கிலம் மின்னினால் தான் மரியாதை. தமிழ் மின்னினால் அவர்கள் மரியாதை என்னாகும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் என் கண்ணில் பட்டவை குறியீடுகள். அனைத்து குறியீடுகளிலும் ஆங்கிலம் (ATM, Lift Lobby, Staircases, Escalator, More shops etc). தவறிக்கூட தமிழ் இருக்கக் கூடாது என்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பது தெரிந்தது. கோவை தமிழகத்தின் ஒரு பகுதி என்று எனது புவியியல் ஆசிரியர் தவறாகச் சொல்லி கொடுத்து இருக்கிறார் என்பது புலனானது.
ஆர்.எம்.கே.வீ சில்க்ஸ், ரிலையன்ஸ் டிறேண்ட்ஸ் ஆகிய கடைகள் தவிர நான் சென்ற அனைத்துக் கடைகளிலும் என்னிடம் பேசிய முதல் மொழி (அரைகுறை) ஆங்கிலம் தான் (Do you need help?, What mode of payment Debit or Cash?, Do you need a carry bag?, This cost 500 rs). இறுதியாக 'தி சினிமாஸ்' (சதயம் சினிமாஸ் இன் கோவை கிளை) சென்றேன். அங்கும் அதே நிலைமை. நான் தமிழில் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் வந்தது ஆங்கிலத்தில். நான் என்ன பார்க்க வெள்ளைக்காரன் மாதிரியா இருக்கேன்?. முதலில் தமிழில் பேச வேண்டியது தானே அப்புறம் கேட்பவருக்குப் புரியவில்லை என்றால் வேறு ஓர் மொழிக்கு மாற வேண்டியது தானே?. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவர்களின் முதலாளிகள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று கூறி இருப்பார்கள் போலும்.
நம்மவர்கள் எப்பவும் நினைப்பது பகட்டான இடங்களுக்கு சென்றால் ஆங்கிலத்தில் (அரைகுறை என்றால் கூட) பேசினால் தான் மரியாதை என்று. எனவே கடை முதலாளிகளும் தங்களை பகட்டாக காட்டிக் கொள்ள ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள். புருக்பீல்ட்ஸ் உம் இதற்கு விதிவிலக்கல்ல. வெகுவாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்த இந்த பழக்கம் சிறு நகரங்களில் ஊடுருவி, இன்று கிராமங்கள் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலைக்கு நாம் அனைவரும் காரணம். ஒரு மொழி நீடித்து வாழ அந்த மொழி பாமரனிடம் வாழ வேண்டும். ஆனால் தமிழ் இன்று பாமரனிடம் அழிந்து கொண்டு இருக்கிறது. நாம் நடைமுறையில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது அம்மா அப்பா பயன்படுத்தும் பல சொற்களை இன்று நம் பேச்சு மொழியில் பயன்படுத்துவது கிடையாது (வலது, இடது, தமிழ் மாதங்கள், திசைகள் இன்னும் பல). இது தொடர்ந்தால் அடுத்து வரும் சந்ததியினர் சொற்களைத் தாண்டி நம் மொழியினையே பயன்படுத்தாமல் நிறுத்தி விடுவார்கள்.
அந்த ஒரு அவல நிலை வராமல் தடுக்க நாம் முடிந்த வரை தமிழில் பேசுவோம். அதற்காக தமிழ் புலவர்களாகச் சொல்லவில்லை. "இவன் என் Friend" என்று சொல்லும் இடத்தில் "இவன் என் நண்பன்" என்று சொல்லலாம். "Thanks" என்று சொல்வதற்கு பதில் "நன்றி" என்று சொல்லலாம். கைபேசி எண் சொல்லும் பொது ஒன்று, இரண்டு என்று தமிழில் சொல்லலாம். இது போன்று நம் நடைமுறை வாழ்க்கையில் வெறும் பகட்டுக்காக பேசும் ஆங்கிலச்சொற்களை தவிர்த்து தயக்கமின்றி தமிழ் சொற்களை பயன்படுத்துவோம். முடிந்த வரை தமிழில் பேச முயற்சிப்பவரையும் 'தமிழ காப்பாத்த வந்துட்டான்டா' என்று ஏளனம் செய்யாமல், அவர்களை உற்சாகப்படுத்துவோம்.
தமிழக அரசும், தமிழ் அறிஞர்களும் தமிழுக்கு என்று மாநாடுகள் நடத்துவதோடு நில்லாமல் உலகின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழாக்கம் கொடுத்து, அவற்றை அகராதியில் ஏற்றி அனைத்து தமிழன் கையில் போய் சேரும் படி செய்ய வேண்டும்.
இவை எல்லாம் நடந்தால் புருக்பீல்ட்ஸ்களிலும் தமிழ் வாழும். இதை செய்ய தவறினால் தமிழ் சமஸ்கிருதம் வழி சென்று வெறும் ஏட்டு மொழியாக மாறும். முடிவு நம் கையில் இல்லை இல்லை நம் நாவில் !!.