Sunday, March 16, 2014

புலியின் சீற்றம்


மருந்துக்காக அழித்தாய், 
மாந்திரிகத்துக்காக அழித்தாய், 
எனை அழிப்பதனால் காட்டினையும்  
அழிக்கிறாய் என உணர்ந்தாயா? 

வயிற்றுப் பசிக்கு  வேட்டையாடும் 
எனை கொடிய மிருகம் என்கிறாய், 
பணப் பசிக்கு இனத்தையே வேட்டையாடும் 
உனை என்ன சொல்லி அழைக்க?

பல லட்சமாக காடுகளை ஆண்ட 
எனை சில நூறாக குறைத்தாய்,
நான் சுவடின்றி அழியும் வரை 
உன் கொலை வெறி அடங்காதா?

தேசிய விலங்கென, வீரத்தின்
சின்னமென அடையாளம் தந்தாய்,
இன்றோ எனை அழியும் இனங்களின்
அடையாளமாக மாற்றியது ஏனோ?

நானும் உனை போல இப்புவியில்  
வாழ உரிமை பெற்ற இனமன்றோ !!
ஆறறிவு பெற்றதனால் மட்டுமே, நீ
தனியே வாழ முடிவெடுத்தாயோ?

பரிணாம வளர்ச்சியில் நீ பெற்ற
அறிவு எனை அழிக்கத்  தானா? 
இப்பொழுதேனும் விழிப்பாய் மனிதா !!
நீயும் வாழ் .. என்னையும் வாழ விடு !!

Related Posts Plugin for WordPress, Blogger...