Monday, November 21, 2011

பொன்னியின் செல்வன் - எனது பார்வை


ஒரு வழியாக பொன்னியின் செல்வன் படித்து முடித்துவிட்டேன். நான் கதை புத்தகம் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லாதவன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த மன்னராகிய ராஜா ராஜ சோழனின் கதை என்பதால் இதை படித்தாக வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. உடனே பொன்னியின் செல்வன் புத்தகத்தை வலைதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன். இரண்டு அத்தியாயத்திற்கு மேல் என்னால் கணினியில் படிக்க முடியவில்லை. புத்தகம் வாங்கி படிப்பது தான் ஒரே வழி என்று முதன் முதலாக நான் வாங்கிய கதை புத்தகம் பொன்னியின் செல்வன். படிக்க தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இதோ இப்பொழுது படித்து முடித்து விட்டேன். (அம்மாடி!! எவ்வளவு வேகம் :-) ).

நான் படித்த பொன்னியின் செல்வன் குறித்த எனது பார்வையே இந்த பதிவு. கல்கி போன்ற ஒரு மகத்தான எழுத்தாளரின் படைப்பை விமர்சனம் செய்யும் முயற்சி அல்ல இந்த பதிவு. அதற்கான தகுதியும் எனக்கில்லை. பொன்னியின் செல்வனில் நான் ரசித்த விஷயங்கள், எனக்கு எழுந்த சந்தேகங்கள், ஏற்பட்ட சிறு  
வருத்தங்கள் ஆகியவற்றை பதிவு செய்யும் முயற்சியே இந்த பதிவு.

மிகவும் ரசித்த விஷயங்கள் !!

1. கதை படிக்கும் ஆர்வம் இல்லாத என்னை போன்ற ஒருவனை ஐந்து பாகம் கொண்ட இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்க வைத்து இருக்கின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் கல்கியின் கதை சொல்லும் பாங்கு. பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், படிப்பவர்களை குழப்பாமல் கதையின் ஓட்டத்தை சீராகவும், மனதில் ஆழமாக பதிய வைக்கும் படியும் கதையை அமைத்து இருந்தார். இதன் காரணமாகவே நான் இந்த புத்தகத்தை 1.5 ஆண்டுகளாக விட்டு விட்டு படித்தாலும் என்னால் எந்தவித தடையுமின்றி கதையை பின்பற்ற முடிந்தது.

2. பொன்னியின் செல்வர் சுழலில் சிக்கி நாகப்பட்டினம் புத்த விகாரத்திற்கு செல்லும் வரையிலான படலம் எனக்கு மிகவும் பிடித்த படலம் ஆகும். சுழல், கப்பல் மற்றும் வந்திய தேவன், பொன்னியின் செல்வர், பூங்குழலி இடையே நடக்கும் உரையாடல்கள் என கல்கி விவரித்து இருக்கும் ஒவ்வொன்றும் என்னையும் அவர்களுடன் பயணம் செய்ய வைத்து விட்டது. இது
போன்று நெஞ்சை அள்ளும் படலங்கள் பல உள்ளன.

3. கதை நெடுகிலும் ராஜபாட்டை குறித்து, ஏரி குறித்து, மக்கள் வாழும் முறை குறித்து கல்கி கூறியது அக்கால மக்கள் எப்படி வாழ்ந்து இருக்க கூடும் என்பதை காட்டியது.

4. பலர் இந்த கதையின் கதாநாயகனாக வந்தியதேவனை கருதினாலும் எனக்கு
பிடித்த கதாபாத்திரம் திருமலை என்கின்ற ஆழ்வார்க்கடியான். அவனை ஒரு நகைச்சுவையாளன் போல் சித்தரித்தாலும், அவனது கதாபாத்திரத்தின் மூலம் பல விஷயங்களை அற்புதமாக, நாம் ஆச்சரியப்படும் வகையில் கூறி இருப்பார் கல்கி.

5. பூங்குழலியின் கதாபாத்திரம் அமைத்த விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. சோழ ராஜ்ஜியத்தில் ஒரு ஓடக்கார பெண் கூட பட்டத்துராணி ஆகலாம் என்பதை காட்டியது. பூங்குழலியின் துணிவும், தன்னம்பிக்கையும், தைரியமும் என்னை மிகவும் கவர்ந்தது. நம் பண்டைய பாமர பெண்டிரின் குணத்தினை பூங்குழலியின் மூலம் அழகாய் கூறி இருப்பார் கல்கி.

ரசித்த விஷயங்கள் என இன்னும்
கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அதற்கு இந்த வலைத்தளம் போதாது.

எழுந்த சந்தேகங்கள் !!

1. கதையில் வரும் பல முக்கியமான விஷயங்கள்
தற்செயலாக நடப்பதாக காட்டி இருப்பது கதையின் சுவாரசியத்தை தடை செய்வதாக இருந்தது. உதாரணமாக பொன்னியின் செல்வரின் மதம் பிடித்த யானை சரியாக எப்படி பூங்குழலி, வானதி இருக்கும் இடம் தேடி வந்தது??. ரவிதாசனும் அவனது கூட்டாளிகளும் சதியாலோசனை நடத்தும் அதே இடத்தில் எப்படி சுழலில் சிக்கிய பழுவேட்டரையர் கரை சேர்ந்தார்??. பறந்து விரிந்த இலங்கையில் சரியாக பொன்னியின் செல்வர் இருக்கும் இடத்திற்கு எப்படி வந்தியதேவனும், ஆழ்வார்க்கடியானும் சென்றனர் ??. இது போல பல நிகழ்வுகள் உண்டு.

2. வந்தியதேவன் மீது குந்தவையும், பொன்னியின் செல்வரும் வைத்து இருக்கும் நம்பிக்கை எனக்கு ஆச்சரியமாக தோன்றியது. முதலில் வந்தியதேவன் கந்தமாறனின் தங்கை மணிமேகலை குறித்து மயங்குவதும், பின்பு பூங்குழலியால் ஈர்க்கப்படுவதும், இறுதியாக குந்தவை மீது காதல் கொள்வதும் என ஒரு நிலை இல்லாத மனம் உடையவனாக இருந்தான். அது மட்டுமின்றி நந்தினியை நேரில் பார்க்கும் பொழுது 'தேவி' என்றும், அவள் இல்லாத பொழுது 'கொடிய நாகம்', 'விஷப்பாம்பு' என்றும் குறிப்பிடுவதும் வந்தியதேவன் மீதான நம்பிக்கையை குறைத்தது. மேலும் அவனது அவசரப்புத்தியினால் தனக்கும், பொன்னியின் செல்வருக்கும் பல இன்னல்களை தேடி தந்தான். இப்படி ஒரு தெளிவு இல்லாத ஒருவனிடம் எப்படி அறிவுமிக்க குந்தவையும், பொன்னியின் செல்வரும் அளவில்லா நம்பிக்கை வைத்து இருந்தனர்??.

3. மகாவீரனாக சித்தரிக்கப்பட்ட கரிகாலன் தன்னை கொலை செய்ய
த்தான் நந்தினி வந்து இருக்கிறாள் என தெரிந்தும், அவளிடம் தொடர்ந்து பேசி கொண்டு இருந்து இறுதியில் கொல்லப்படுவது வியப்பாக இருந்தது. இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பான் அந்த மாவீரன்?.

4. பொன்னியின் செல்வர் இலங்கை தெருக்களில் நடமாடும் பொழுது சில முறை ஊமை கிழவியால் காப்பாற்றப்படுவார். இலங்கையே வென்ற மாவீரர், சோழ ராஜ்ஜியத்தின் இளவரசர் எப்படி தெருக்களில் எந்தவித பாதுகாப்புமின்றி செல்வார்?.

5. கரிகாலனை கொன்றது யார் என்பது இறுதி வரை
குழப்பமாகவே இருந்தது. பழுவேட்டரையர் தான் கொன்றதாக கூறி தன்னை மாய்த்து கொண்டாலும் இறக்கும் தருவாயில் தான் கொல்லவில்லை என்று கூறி இறக்கிறார். அப்படி என்றால் கரிகாலனை கொன்றது யார்??. கொலை நடந்த இடத்தில் இருந்த நந்தினி, வந்தியதேவன் ஆகியோரில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ரவிதாசனாக இருக்க கூடுமோ??. இந்த கேள்விக்கான பதிலை கல்கி வாசகர்களிடம் விட்டு விட்டாரோ??.

6. வரலாற்று கூற்றின்படி, சுந்தர சோழர்க்கு பிறகு மதுராந்தக சோழர்
சோழ ராஜ்ஜியத்தின் ஆட்சி பொறுப்பு ஏற்றார் என்பதில் ஐயமில்லை. ஆனால் மதுராந்தக சோழரை, அரண்மனை வாசமே தெரியாத, எந்த போர் பயிற்சியும் பெறாதவன் போல சேந்தன் அமுதன் மூலம் சித்தரித்திருப்பது திகைப்பாக இருந்தது. மதுராந்தக சோழர் எந்த போர் பயிற்சியும் பெறாத மன்னர் என்பது வரலாற்று உண்மையா இல்லை கல்கியின் கற்பனையா??. கல்கியின் கற்பனையாக இருக்கும் பட்சத்தில் இந்த நிகழ்வு சற்று அதிதமாக எனக்கு தோன்றுகிறது.

(இந்த சந்தேகங்கள் கல்கியின் கற்பனை திறனை குறித்தோ அல்லது அவரது எழுத்தை குறித்தோ அல்ல. கதையில் முழுவதுமாக என்னை செலுத்தியதனால் ஏறப்பட்ட சிறு நெருடல்கள். இந்த நெருடல்களுக்கு உங்களிடம் பதில் இருந்தால் தயவு செய்து பதிவு செய்யவும். ஆனால் ஒன்று
கூறியே ஆக வேண்டும், என்னையும் கூட கதைக்குள் முழுவதுமாக செலுத்த வைத்தது என்றால் அது கல்கியின் அபார மொழி நடை மற்றும் எழுத்தாற்றலை காட்டுகிறது).

ஏற்ப்பட்ட சிறு வருத்தங்கள் !!

1. முன்னரே கூறியது போல இந்த கதை படிக்க ஒரு பெரிய தூண்டுகோள் இது ராஜா ராஜ சோழன் காலகட்டத்தில் நடந்த கதை என்பது. ஆனால் ராஜா ராஜ சோழனின் சாதனைகள் குறித்தோ அவர் ஆட்சி குறித்தோ சொல்லப்படாதது மிகுந்த வருத்தத்தை தந்தது !!.

2. சோழ ராஜ்ஜியத்தின் மகாசக்கரவர்த்தி சுந்தர சோழர் தனது இறுதி காலத்தில் சிற்றரசர்களின் கைபொம்மையாக இருந்தார் என்பது வருத்தத்தை தந்தது.

சுருக்கமாக பொன்னியின் செல்வன் குறித்து கூற வேண்டுமென்றால் "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" :-) என்ற கூற்றை தான் கூற வேண்டும். "பொன்னியின் செல்வன் - தமிழ் தாயின் செல்வன்" - தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம், அல்ல அல்ல, பொக்கிஷம் இது. பொன்னியின் செல்வன் கொடுத்த உற்சாகத்தில் பால குமாரன் எழுதிய, பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியான , "உடையார்" படிக்க 
 ஆயத்தமாகிவிட்டேன். பொன்னியின் செல்வன் போல் இதுவும் சுவாரசியமாகவும், தகவல் பூர்வமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

Sunday, November 13, 2011

கடமை உணர்ச்சி


கடமை உணர்ச்சி -
சிதைந்து உடைந்த பின்னும் உருவம்
காட்டும் நிலைக்கண்ணாடி !!
Related Posts Plugin for WordPress, Blogger...