Thursday, April 4, 2013

நீயின்றி அணுவும் அசைவதில்லை

என் வாழ்வூதியம்  தரும் முதலாளியானாய்,
என் தனிமைக்குத் துணையானாய்,
என் பயணம் எங்காயினும் வரும் பயணியானாய்,
என் தமிழ் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகமானாய்,
விடியல் தொடங்கி இரவு வரை என்னுடனே இருக்கும் நிழலானாய்,
கையிலிருந்தபடி அறிவினைத் தரும் ஆசானானாய்.

இவை அனைத்துமாகி எனை உன்னிடத்தில் சிறை வைத்தாய்,
சக மனிதர்களிடம் பழகுவதை குறைக்க வைத்தாய்.
உன்னை விட்டு போய்விடுவேன் என்ற பொறாமையா?
என்னையும் உன்னைப் போல எந்திரமாக்கிவிட்டாய்.

நீ நல்லவனா?  வல்லவனா?  கொடியவனா?
தெரியவில்லை..  ஆயினும்
நீயின்றி அணுவும் அசைவதில்லை எனக்கு,
என் கணினியே!! நீயின்றி உலகில்லை எனக்கு !!

  

Friday, March 22, 2013

இதுவும் நடக்கும்....

இலங்கை தமிழர் நலனுக்காக உலக நாடுகள் பாடுபடும்,
இந்தியாவில் பெருகி கிடக்கும் ஊழல் ஒழியும்,
இந்திய அரசு தீவிரவாத்தை முற்றிலும் ஒழிக்கும்,
அரசு அலுவலங்களில் லஞ்சமின்றி வேலை நடக்கும்,
வரி ஏயப்பு என்பது இல்லாமல் போகும்,
தமிழகத்தில் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கும்,
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கும்,
கர்நாடகம் உரிய காவேரி நீரைத் தமிழகத்திற்கு திறக்கும்,
பள்ளிகள் முறையான கட்டணம் வசூலிக்கும்,
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்கும்,
எளியோருக்கும் கருத்துரிமை கிடைக்கும்,
இவை எல்லாம் நடக்கும்,
இதற்கு மேலும் கூட நடக்கும்.
உலகம் மறுபடியும் பிறந்து வந்தால் !!

Thursday, March 21, 2013

உயிர் மொழி

ன்பு நிறைந்த மொழி,
ண்டவன் அருளிய மொழி,
லக்கணமில்லா மொழி,
டு இணை இல்லா மொழி, 
வகை தரும் மொழி,
ரார் அனைவரையும் மயக்கும் மொழி,
ளிதில் மேதைகளுக்கும் புரியா மொழி,
க்கம் தீர்க்கும் மொழி,
யமேதும் எழா மொழி,
ளிவு மறைவற்ற மொழி,
ங்கார இசையினும் இனிய மொழி,
வை ரசித்த மொழி,
தே.. மழலை மொழி !!..

Saturday, March 16, 2013

குழந்தை தொழிலாளி



கல் நெஞ்சம் கொண்டவர்களிடம்
கல் உடைக்கிறேன்,

கடனாளி பெற்றோரிகளின்
கடன் தீர்க்கும் பொருளாகிறேன்,

படிப்பின் மூலம் ஒளி தருவதை விடுத்து
பட்டாசின் மூலம் ஒளி தருகிறேன்,

ஓடியாடி விளையாடாமல்  பணத்தாசை ம(மா)க்களுக்காக
ஓடியாடி உழைக்கிறேன்,

சிறப்பான கல்வியினை நோக்கி  ஓட ஆசை கொண்டும்
சில்லறை தேடி ஓட வற்புறுத்தப்படுகிறேன்,

ஈரமற்ற முதலாளியின் பாத்திரங்களை   கண்களின்
ஈரம் கொண்டு கழுவுகிறேன்,

ஆயிரமாயிரம் கண்கள் என்னை கடந்த   போதும்
ஆண்டவன் மட்டுமே துணையாக வருகிறான்,

பரிதவிக்கும் கண்கள் கூட இரக்கப் பார்வை  மட்டுமே
பரிசாகத்  தருகின்றன,

இரக்கமற்ற சமுதாயமே.. மனம் இறங்கி கேட்கிறேன்
இறுக்கம் தளர்த்தி உதவ மாட்டாயா?

கருவறையிலிருந்து   வெளிப்பட்ட முதல் உழைக்கிறேன்
கண் கொண்டு பார்க்க மாட்டாயா?

என் கதறலை  உன் செவி கேட்க மறுக்கிறதா ?
என் நிலை மேன்பட ஏதேனும் செய்ய மாட்டாயா?

இந்த கவிதைக்கு அட்லாண்டா மாநகர தமிழ் சங்கத்தின் கவிதை போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்தது 



Friday, February 1, 2013

மாய உலகம்


என் விழித்திரையில் விழும் காட்சிகள்,
என் நரம்பு மண்டலம் உணரும் உணர்ச்சிகள்,
என் செவி மடல் கேட்கும் ஒலிகள்,
இவை மட்டும் தான் நிஜமோ?
மற்ற அனைத்தும், அனைவரும் மாயையோ?
என் குடும்பத்தாரும், நண்பர்களும் கூட மாயையோ?
இல்லையெனில், ஏனையோரின் உணர்ச்சியை
ஏன் என்னால் உணர முடியவில்லை?
அவர்களின் உலகத்தை ஏன் என்னால் காண முடியவில்லை?
மாயையெனில், நான் மட்டும் இந்த உலகத்தில் தனியோ?
உலகத்தில் அனைத்தும் எனக்காகப் படைக்கப்பட்டதோ?
உலகத்திற்கு என்னைத் தனியாக அனுப்பிய
கடவுளின் நோக்கம் தான் என்னவோ?
இல்லை இந்த கேள்விகள் எல்லாம் நான் பித்துப்பிடித்தவனாக
மாறிக் கொண்டு இருக்கிறேன் என்பதற்கான அறிகுறியோ?
இந்த கேள்விகளுக்கு பதில் தருவோர்
யாருமுண்டோ இந்த உலகத்தில்.... மாய உலகத்தில் !!

ஓட்டம்


சிறுவயதில் விளையாட்டை மறந்து
தரவரிசை(ரேங்க்) நோக்கி ஓட்டம்,
பருவ வயதில் சுயவிருப்பத்தை மறந்து
 'காகித' பட்டம் நோக்கி ஓட்டம்,
பட்டம் பெற்றவுடன் படித்த படிப்பை மறந்து
'கணினி' வேலை நோக்கி ஓட்டம்,
பின் குடும்பத்தைப் பிரிந்து
பதவி உயர்வு நோக்கி ஓட்டம்,
இன்று தாய்நாட்டை துறந்து
பணத்தை நோக்கி ஓட்டம்,
எதற்காக இந்த தொடர் ஓட்டம்?
யாருக்காக இந்த ஓட்டம்?
எதை நோக்கி இந்த இலக்கிலா ஓட்டம்?
எங்கே நிற்கும் இந்த ஓட்டம்?

Wednesday, November 28, 2012

இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும்

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு - இன்று பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடயம். முதலில் இடஒதுக்கீடு கொண்டு வந்தற்கான காரணத்தைப் பார்போம். Dr.அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனம் வகுத்த பொழுது பல்வேறு துறைகளிலும் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். நம் முன்னோர்கள் தொழில்வாரியாகச் சமூகத்தினை பல பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு வந்தனர். காலப்போக்கில் சில சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து, சில சமூகத்தினரை உயர் சாதி எனவும், வேறு சிலரை கீழ் சாதி எனவும் பார்க்கும் பழக்கம் உருவானது. ஆங்கிலேய ஆட்சியில் இந்த வேற்றுமை பன்மடங்கு பெருகியது. இதன் காரணமாகச் சில பிரிவு மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாகவே இருந்து வந்தனர். எனவே, சுதந்திரம் அடைந்தவுடன் இந்த நிலை மாற, அனைவரையும் ஒரே நிலைக்கு கொண்டு வர இடஒதுக்கீடு Dr. அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்பட்டது.

நாம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகிய இன்றைய சூழலில் இது தேவையானதா?என்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை இது தேவையானதே.

இன்றளவும் நம் சமூகத்தில் சாதி அடிப்படையில் ஒரு பிரிவு மக்களை அடக்கி ஆளும் அசட்டுத்தனம் இருக்கத்தான் செய்கிறது. நகர்புறங்களில் ஒரு அளவு குறைந்து இருந்தாலும், கிராமப்புறங்களில் வெகுவாக இருக்கத்தான் செய்கிறது. எனவே,அவர்கள் மேலே ஏறி வர, வெளி உலகம் பற்றி அறிய, தங்கள் ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து போராட இடஒதுக்கீடு என்ற துணை அவர்களுக்குத் தேவை. பல நேரங்களில் இடஒதுக்கீட்டின் பயன்பாட்டை நாம் காணத்தவறுகின்றோம். இடஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைத்து என்னுடன் பயின்ற நண்பர்கள் பலர் இன்று நல்ல நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் பெற்ற தகுதி மதிப்பெண் குறைவாக இருந்து இருக்கலாம். ஆனால் அவர்கள் வந்த சூழலைப் பற்றி அறியும் பொழுது தான் அவர்கள் மதிப்பெண்னின் உண்மையான மதிப்பை உணர முடிகிறது. இது போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மேலே வருவது அவர் சார்ந்த சமூகத்திற்கு ஒரு உத்வேகத்தை தரும். அந்த சமூகமே முன்னேற அது ஒரு வாய்ப்பாக அமையும். அனைவரையும் ஒரு தளத்தில் வைத்துப் பார்க்கும் நாள் வரும் வரையில் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும்.

இவ்வளவு வலிமை வாய்ந்த இடஒதுக்கீடு என்ற சக்தி இன்று சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை எனபதே கசப்பான உண்மை. அதன் காரணமாகவே பலரும் இடஒதுக்கீட்டிற்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர். இடஒதுக்கீட்டை வைத்து சமூகத்தை முன்னேற வழிவகை காணாமல், அதை வைத்து ஓட்டு வங்கியை பெருக்கும் அரசியல் தான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. இடஒதுக்கீடு அமலில் இருந்து 65 ஆண்டுகளாகியும், இடஒதுக்கீட்டினால் பயன்பெற்றவர்கள் ஏராளமாக இருந்தும், இடஒதுக்கீடு குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இடஒதுக்கீட்டை பிறப்புரிமை போல பலரும் கருதுவது. தங்கள் சமூகம் வளர்ச்சி அடைந்த பின்னரும் தங்களுக்கான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய எவரும் தயாராக இல்லை.

எனவே, அரசே முன் வந்து ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட காலத்திற்கு (5 ஆண்டோ, 10 ஆண்டோ)ஒரு முறை அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு மக்கள் நலன் ஒன்றே பேணும் தலைவர்கள் நம்மிடையே உருவாக வேண்டும். பொதுமக்களாகிய நாமும் நமக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கும், இடஒதுக்கீடுக்கும் நாம் தகுதியுடையவரா? என்று சுயபரிசோதனை செய்து அதற்கேற்ப செயல்பட்டால் இடஒதுக்கீட்டின் பயன்பாட்டினை நம் சமூகம் முழுமையாக உணர முடியும்.

மாறாக இவை நடக்காவிட்டால்,இடஒதுக்கீடு வழங்கியதற்கான
நோக்கம் அடிப்பட்டு, சமதர்ம சமத்துவ சமுதாயம் என்றுமே ஒரு எட்டாக்கனியாகவே இருக்கும். இடஒதுக்கீட்டின் சக்தியை உணர்ந்து, அதனை ஒழிக்க முனையாமல், அதனை சீர்திருத்த முயல்வோம். அதன் மூலம் சமதர்ம சமத்துவ சமுதாயம் உருவாக்குவோம் !!
Related Posts Plugin for WordPress, Blogger...