Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, May 12, 2013

சங்க இலக்கியச் சுவையைத் தேடி முதல் படி...

என் வலைப்பதிவு தொடங்கிய பொழுது சங்க இலக்கியம் குறித்து
பதிவு எழுதும் அளவிற்கு வருவேன் என்று நினைக்கவில்லை.

பள்ளியில் சங்கப் பாடல்களை படிக்கும் பொழுது, மதிப்பெண் பெற வேண்டும் என்று நோக்கத்தில் மனப்பாடம் செய்தேனே தவிர ரசித்தோ, புரிந்தோ படிக்கவில்லை. " சங்கப் புலவர்கள் அவங்க பாட்டுக்கு எழுதிவிட்டு போய்ட்டாங்க யார் மனப்பாடம் செய்து எழுதுவது" என்று பல நேரங்களில் சங்கப் புலவர்களை கூட கடிந்து கொண்டது உண்டு. ஆண்டு தோறும் முப்பது குறள்களை மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற காரணத்தினால் திருவள்ளுவரை கூட கடிந்து கொண்டது உண்டு.(தமிழ் அறிஞர்கள் என்னை மன்னிக்கவும் :)).

ஆனால் இன்று திரும்பி பார்க்கும் பொழுது இவ்வளவு செழுமையான இலக்கியத்தை நான் எப்படி ரசிக்காமல் இருந்தேன் என்று நினைத்தால் சற்று வெட்கமாக இருக்கிறது. மதிப்பெண்ணை குறிவைத்தே ஓடியதால் சங்க இலக்கியத்தின் செழுமையை காணத் தவறி விட்டேன்.  இன்றோ மதிப்பெண் இல்லை, பரீட்சை இல்லை, தேடல், ஆர்வம் மட்டும் உள்ள காரணத்தினால் சங்க இலக்கியத்தின் செழுமையையும்,  அதில் இருக்கும் இனிமையும் உணர முடிகிறது.

எனது நண்பர் கிரேஸ் அவர்கள் கொடுத்த ஊக்கமும், அவரது சங்க இலக்கியம் குறித்தப் பதிவுகளும், எனது இந்த மாற்றத்திற்கும், என் தமிழ் தேடலுக்கும் மிக முக்கிய காரணம். எனவே, அவருக்கு என் நன்றிகளை கூறிக் கொண்டு,  முனைவர் இரா. ருக்மணி அவர்கள் எழுதிய "முல்லைப் பாட்டும், பண்டைத் தமிழகமும்"  என்ற புத்தகத்தின் மூலம் நான் ரசித்த முல்லைப்பாட்டிலிருந்து எனக்குப் பிடித்த சில பாடல்களை, விளக்கவுரையுடன் இங்கு பகிர்கிறேன், உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு :)

ஆசிரியர் - நப்பூதனார்
கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்
  .................................................................அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால
கோடல் குவி முகை அங்கை அவிழ
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் 


விளக்கவுரை  -
முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக்
கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், மலர் இதழ் நிறைந்த செங்காந்தள் உதிரம் நிறத்தில் மலர்ந்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடும். இத்தகைய முல்லைநிலத்து, எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில்.

மலர்ந்து மணம் வீசும் காயா, செங்காந்தள் போன்ற மலர்கள் மூலம் முல்லை நிலத்தின் அழகையும், தவறாமல் பெய்யும் மழையினால் விளைந்த கதிர் மூலம் முல்லை நிலத்தின் செழுமையும், துள்ளித் திரியும் மான்கள் மூலம் முல்லை நிலத்தில் குடி கொண்டுள்ள மகிழ்ச்சியையும் ஒரு சேர அழகாக எடுத்தக் காட்டுகிறது இந்த அற்புதமான பாடல்.

மற்றுமொரு என் மனம் கவர்ந்த பாடல்...

பாசறையில் காவலாளர்
நெடு நா ஒண் மணி நிழத்திய நடு நாள்
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசை வந் தாங்கு
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ   



விளக்கவுரை 
நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமம்.அப்பொழுதில் காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள்,  நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல – தலையில்  தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்  தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு பாதுகாவலைச் செய்தனர்.

உழைத்து களைத்த காவலரின் நிலையை காற்றில் ஆடும்
மல்லிகை கொடியுடன் உவமைப்படுத்திய ஆசிரியர் நப்பூதனாரின் கற்பனையை என்னவென்று சொல்வது.  வகுப்பறையில் எனது நிலைமையை நினைவுப் படுத்திவிட்டார். :)

மேலும் முல்லைப்பாட்டின் பல பாடல்களையும், அதற்கான விளக்கவுரைகளையும் இந்த தளத்தில் http://learnsangamtamil.com/mullaipattu/ காணலாம்.

Saturday, April 13, 2013

தமிழ்ப் புத்தாண்டும், குழப்பமும்...

தமிழ்ப் புத்தாண்டு எந்த நாள் என்று கடந்த சில ஆண்டுகளாக ஒரு குழப்பம் நம்மிடையே நிலவுகிறது. தை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சிலரும், 'இல்லை!! இல்லை'  சித்திரை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சிலரும் சொல்லி வருகிறார்கள்.

எது நம்மப் புத்தாண்டு என்று ஒரு அலசு அலசுவோமா?

தை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சொல்பவர்கள் வைக்கும் முக்கியமானக் காரணங்கள் இதோ....

1. 1921 ஆம் ஆண்டு தமிழ்ப் பண்டிதர்களான மறைமலை அடிகள்,
திரு.வி.க. சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார்,  நாவலர் சோம. சுந்தர பாரதியார்,
கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் கூடி தை மாதம் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் ஆண்டினை (திருவள்ளுவர் காலம் கி.மு. 31, வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு) பின்பற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தனர் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

2. குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கி, அதனைத் தமிழர்கள் மீது திணித்தான் என்றும், பிரபவ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும் ஆண்டுகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான் என்பதே இதற்குச் சாட்சி என்றும் கூறுகின்றனர்.

இவற்றைப் பார்க்கும் பொழுது "அட, சரியாத் தான் சொல்றாங்க" என்று தோன்றியது. உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறதா?. சரி சரி முடிவு செய்யும் முன் இன்னொருத் தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டாமா? தொடர்ந்து படிங்க...

இதோ சித்திரை முதல் நாளே புத்தாண்டு என்றுக் கூறுபவர்களின் வாதம்...

1. தமிழர்களின் ஆண்டு முறை சூரியன் கொண்டு வரையறுக்கப்பட்டது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறைச் சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள் 1. மேடம்(‍மேஷம்), 2. இடபம்(ரிஷபம்) , 3. மிதுனம், 4. கர்க்கடகம்(கடகம்), 5. சிங்கம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்தரையாகும்.
(நன்றி: விக்கிப்பிடியா)

2. ஒரு ஆண்டு இளவேனில்(சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாசி), கூதிர் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி(மார்கழி, தை),  பின்பனி(மாசி, பங்குனி) என ஆறுப் பருவங்களைக் கொண்டது. வசந்தம் வரும் இளவேனில் காலம் தொடங்கும் சித்திரை மாதத்தைப் புத்தாண்டாய் கொள்வது தான் சரி என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

3. சூரியனை ஆதாரமாகக் கொண்ட மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா போன்ற வேறு மாநிலத்தவரும், நேபாளம், பர்மா, கம்போடியா போன்ற வேறு நாட்டவரும் சித்தரை ஒட்டியேத் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

4. அகத்தியரும்  பன்னிராயிரத்தில், பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

5. ஜாதகமும், ஜோசியமும் சித்தரைப் புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டதே.

6. 1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழ்ப் பண்டிதர்கள் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது உண்மையானால், இத்தனை வருடங்களாகியும் அது நடைமுறைப் படுத்தப்படாதது ஏன்?

7. வடமொழிப் பெயர்கள் கொண்ட ஆண்டுகள் நெருடலை தரும் பட்சத்தில், கால அட்டவணை மாற்றுவதற்குப் பதில் வடமொழி ஆண்டுகளுக்கு இணையானத் தமிழ்ப் பெயர்களை தேடலாமே? என்று நினைத்த பொழுது, இந்த படத்தைக் காண நேர்ந்தது.  அழகாக 60 ஆண்டுகளுக்கும் இணையானத் தமிழ்ப் பெயர் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர்கள் வழக்கத்தில் கொண்டு வர முயற்சி செய்தால் போதுமானது.


இவை அனைத்தும் பார்க்கும் பொழுதுச் சித்தரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற வாதமே ஏற்புடையதாக உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமில்லாது உலகத்தில் வாழும் அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் பொதுவான திருநாள். அது குறித்து எந்த முடிவாயினும் தமிழகம் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுப்பதுச் சரியல்ல. 

சித்தரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது பல நூறு வருடங்களாகக் கொண்டாடி வரும் ஒரு வழக்கம். அதை திடீரென்று எப்படி மாற்றிக் கொள்ள முடியும். மாற்றுவதால் யாருக்கு என்னப் பயன்? மாற்ற நினைத்தால் குழப்பம் தானே வரும்.

எனவே தேவையற்ற குழப்பத்தைத் தவிர்த்து நம் புத்தாண்டு சித்திரை முதல் நாளே என்பதில் உறுதியாய் இருப்போம்.

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

விஜய வருடம் இனிதே விஜயமாகட்டும் :)

Friday, September 7, 2012

நாம் பேசும் தமிழ் (?!)

புருக்பீல்ட்ஸ் (Brookefields) மாறி வரும் கோவையின் புதிய அடையாளம். இந்த மாற்றத்தில் மிக முக்கியமான ஒன்று கொங்கு தமிழுக்கு சாவு மணியடித்து விட்டு ஆங்கிலத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது. அதற்கு உதாரணமாக நிற்கிறது புருக்பீல்ட்ஸ்.


புருக்பீல்ட்ஸ் - கோவைக்கு விஜயம் செய்து இருக்கும் ஒரு வணிக-கேளிக்கை வளாகம் (Multiplex). சென்ற வாரம் தான் புருக்பீல்ட்ஸ் போக நேர்ந்தது, வழக்கம் போல தனியாகத் தான் :-). புருக்பீல்ட்ஸை நெருங்க நெருங்க, 'புருக்பீல்ட்ஸ்' என்ற 'ஆங்கில' எழுத்துக்கள், மின் விளக்கின் ஒளியால் மின்னி, என்னை வரவேற்றது. ஆம், கோவை இங்கிலாந்தில் அல்லவா இருக்கிறது. இங்கு ஆங்கிலம் மின்னினால் தான் மரியாதை. தமிழ் மின்னினால் அவர்கள் மரியாதை என்னாகும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் என் கண்ணில் பட்டவை குறியீடுகள். அனைத்து குறியீடுகளிலும் ஆங்கிலம் (ATM, Lift Lobby, Staircases, Escalator, More shops etc). தவறிக்கூட தமிழ் இருக்கக் கூடாது என்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பது தெரிந்தது. கோவை தமிழகத்தின் ஒரு பகுதி என்று எனது புவியியல் ஆசிரியர் தவறாகச் சொல்லி கொடுத்து இருக்கிறார் என்பது புலனானது.

ஆர்.எம்.கே.வீ சில்க்ஸ், ரிலையன்ஸ் டிறேண்ட்ஸ் ஆகிய கடைகள் தவிர நான் சென்ற அனைத்துக் கடைகளிலும் என்னிடம் பேசிய முதல் மொழி (அரைகுறை) ஆங்கிலம் தான் (Do you need help?, What mode of payment Debit or Cash?, Do you need a carry bag?, This cost 500 rs). இறுதியாக 'தி சினிமாஸ்' (சதயம் சினிமாஸ் இன் கோவை கிளை) சென்றேன். அங்கும் அதே நிலைமை. நான் தமிழில் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் வந்தது ஆங்கிலத்தில். நான் என்ன பார்க்க வெள்ளைக்காரன் மாதிரியா இருக்கேன்?. முதலில் தமிழில் பேச வேண்டியது தானே அப்புறம் கேட்பவருக்குப் புரியவில்லை என்றால் வேறு ஓர் மொழிக்கு மாற வேண்டியது தானே?. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவர்களின் முதலாளிகள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று கூறி இருப்பார்கள் போலும்.

நம்மவர்கள் எப்பவும் நினைப்பது பகட்டான இடங்களுக்கு சென்றால் ஆங்கிலத்தில் (அரைகுறை என்றால் கூட) பேசினால் தான் மரியாதை என்று. எனவே கடை முதலாளிகளும் தங்களை பகட்டாக காட்டிக் கொள்ள ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள். புருக்பீல்ட்ஸ் உம் இதற்கு விதிவிலக்கல்ல. வெகுவாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்த இந்த பழக்கம் சிறு நகரங்களில் ஊடுருவி, இன்று கிராமங்கள் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலைக்கு நாம் அனைவரும் காரணம். ஒரு மொழி நீடித்து வாழ அந்த மொழி பாமரனிடம் வாழ வேண்டும். ஆனால் தமிழ் இன்று பாமரனிடம் அழிந்து கொண்டு இருக்கிறது. நாம் நடைமுறையில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது அம்மா அப்பா பயன்படுத்தும் பல சொற்களை இன்று நம் பேச்சு மொழியில் பயன்படுத்துவது கிடையாது (வலது, இடது, தமிழ் மாதங்கள், திசைகள் இன்னும் பல). இது தொடர்ந்தால் அடுத்து வரும் சந்ததியினர் சொற்களைத் தாண்டி நம் மொழியினையே பயன்படுத்தாமல் நிறுத்தி விடுவார்கள்.

அந்த ஒரு அவல நிலை வராமல் தடுக்க நாம் முடிந்த வரை தமிழில் பேசுவோம். அதற்காக தமிழ் புலவர்களாகச் சொல்லவில்லை. "இவன் என் Friend" என்று சொல்லும் இடத்தில் "இவன் என் நண்பன்" என்று சொல்லலாம். "Thanks" என்று சொல்வதற்கு பதில் "நன்றி" என்று சொல்லலாம். கைபேசி எண் சொல்லும் பொது ஒன்று, இரண்டு என்று தமிழில் சொல்லலாம். இது போன்று நம் நடைமுறை வாழ்க்கையில் வெறும் பகட்டுக்காக பேசும் ஆங்கிலச்சொற்களை தவிர்த்து தயக்கமின்றி தமிழ் சொற்களை பயன்படுத்துவோம். முடிந்த வரை தமிழில் பேச முயற்சிப்பவரையும் 'தமிழ காப்பாத்த வந்துட்டான்டா' என்று ஏளனம் செய்யாமல், அவர்களை உற்சாகப்படுத்துவோம்.

தமிழக அரசும், தமிழ் அறிஞர்களும் தமிழுக்கு என்று மாநாடுகள் நடத்துவதோடு நில்லாமல் உலகின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழாக்கம் கொடுத்து, அவற்றை அகராதியில் ஏற்றி அனைத்து தமிழன் கையில் போய் சேரும் படி செய்ய வேண்டும்.

இவை எல்லாம் நடந்தால் புருக்பீல்ட்ஸ்களிலும் தமிழ் வாழும். இதை செய்ய தவறினால் தமிழ் சமஸ்கிருதம் வழி சென்று வெறும் ஏட்டு மொழியாக மாறும். முடிவு நம் கையில் இல்லை இல்லை நம் நாவில் !!.

Monday, August 13, 2012

விழித்து எழு தமிழா !!

உலகின் முதல் கப்பல் படை, யானைப்படை நிறுவி,
போர்கள் பல வென்று தரணி ஆண்ட எம் தமிழினம் !!
பொது மறையாம் திருக்குறள் தந்து உலகினுக்கு 
வாழ்க்கை நெறியை கற்று தந்த எம் தமிழினம் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோள்களின்  
அமைப்பையும், தாக்கத்தையும் அறிந்திருந்த எம் தமிழினம் !!
ஓர் அறிவு உயிர், ஈர் அறிவு உயிர் என தொல்காப்பியம் மூலம் 
டார்வினுக்கு முன்னரே உயிரின் தோற்றத்தை 
கூறியிருந்த  எம் தமிழினம் !!
உலோகம் பற்றி  ஏனைய நாடுகள் அறியாத காலத்தில் 
அவற்றை கொண்டு அழகிய சிலைகள் தந்த எம் தமிழினம் !!
பெரிய கோவில், மகாபலிபுரம், மீனாட்சி அம்மன் கோவில் என
கட்டிடக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்த எம் தமிழினம் !!
அணுவின் சக்தி குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு 
முன்னரே  பாடிய எம் தமிழினம் !!
பல நூறு சித்தர்களையும், அவர்கள் மூலம்
சித்தவைத்தியத்தையும்  தந்த எம் தமிழினம் !! 
ஆதிவாசியாய் ஏனைய உலகம் இருந்த பொழுதும் 
(கல்)அணைக் கட்டி, யானை கொண்டு போரடித்து 
விவசாயம் செய்த எம் தமிழினம் !!
இன்னும்  எண்னில் அடங்கா  மேன்மை
வாய்ந்த எம் தமிழினம்  இன்று,
தன் முன்னே சொந்த சகோதர்(ரி)கள் சாகக்கண்டும், 
ஒன்றும் செய்ய இயலாத கோழை இனமாக மாறியது ஏனோ?
'அம்மா', 'அப்பா'வை விடுத்து, 'மம்மி'களையும், 'டாடி'களையும்,
அரவணைத்து கொண்டது ஏனோ?
தன் வாழ்க்கை நெறியை தவிர்த்து, மேற்கத்திய 
வாழ்க்கை முறைக்கு மாறியது ஏனோ?
அறிவு மழுங்கி மேற்கத்திய நாடுகளுக்கு உழைக்கும் 
அடிமைகளானது ஏனோ?
தமிழன் என்ற  கர்வத்தினை, இறுமாப்பினை இழந்து 
தமிழன் என்று சொல்லக்கூட  தயங்குவது ஏனோ?
10000 ஆண்டுகள் மேற்ப்பட்ட நம்  மேன்மையை, அறிவை. 
800 ஆண்டுகளே ஆக்கிரமித்த முகலாயர்களிடமும், 
ஆங்கிலேயர்களிடமும் பறி கொடுத்து விட்டோமா? 
இந்நிலை மாற வேண்டாமா? 
நம் அடிமை மோகம் தனிய  வேண்டாமா? 
இழந்த  மேன்மையை மீட்க வேண்டாமா? 
ஆழந்த நித்திரையில் இருக்கும் நாம்..
விழித்து எழுவோம்  !! வீறு கொண்டு எழுவோம்  !!
தமிழினத்தின் பெருமையை  ஆராய்ந்து அறிந்து 
உலகினுக்கு  உரக்கச் சொல்வோம் !!. 
இழந்த  மேன்மையை  அடைவதற்கான
இந்த முதல் படியினை எடுத்து வைப்போம் !!
தமிழைக் கற்று உணர்ந்து மேலும் மேன்மையடைய
இன்னும் பல சாதனை செய்வோம் !!
நம் மொழி தொன்மையானது என்ற பெருமையை
காத்து நம் சந்ததியினர்க்கு வழங்குவோம்!!
பின் விடியல் பிறக்கும்  நம் தமிழுக்கும்,  நம் தமிழினத்திற்கும் !!

Friday, April 13, 2012

சவால்



இந்த தமிழ் புத்தாண்டு அன்று உங்களுக்கு ஒரு சவால் இந்த பாடலை 
தடை  இல்லாமல் படியுங்கள் பார்க்கலாம். என்னால் இதுவரை முடியவில்லை.  இப்பாடல் அருணகிரி நாதர் அவர்களின் கந்தர் அந்தாதியின் 54ஆவது பாடல்.  முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். 

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
 திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
 திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
 திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இந்த பாடல் ஒன்று போதும் நம் தமிழ் மொழியின் செழுமையை  உலகறிய.

Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு



அறம் தழைத்து,
செல்வம் செழித்து,
அறிவு மிளிர்ந்து, 
ஆரோக்கியம் சிறந்து,
இன்பம் பெருகி, 
மகிழ்ச்சி பொங்கி,
நந்தன வருடம், 
நந்தவனம் ஆகட்டும் !!

Thursday, September 1, 2011

முதல் காதலி


என்ன ஆச்சர்யமா இருக்கா?? எனக்கும் காதலி உண்டு.. தொடர்ந்து படிங்க !! :-)

எந்த ரம்பைக்கும் அழகில்லை
அவளைப்போல்
எந்த தேனும் சுவைப்பதில்லை
அவளைப்போல்
எந்த காந்தத்திற்கும் ஈர்ப்பில்லை
அவளைப்போல்
எந்த மன்னனும் ஆளுமை செலுத்தியதில்லை
அவளைப்போல்
எந்த பெண்ணும் என்னை ஆக்கிரமித்ததில்லை
அவளைப்போல்
எந்த காதலிக்கும் காதலர்களில்லை
அவளைப்போல்
ஆயிரம் ஆயிரம் காதலர்கள் உண்டு அவளுக்கு
ஆனால் அவள் போல் கன்னி யாருமில்லை
என் முதல் காதலி
இப்போதைக்கு என் ஒரே காதலி
கன்னித்தமிழ் !!
Related Posts Plugin for WordPress, Blogger...