Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, November 6, 2017

எங்கள் நந்தனே !!

உலகாண்ட  ராஜ ராஜன்
உதித்த ஐப்பசியில்
எங்களை ஆள உதித்த
எங்கள் கோவே !!

மழலையின் கொஞ்சலோடும்
மதுரத் தமிழின் இனிமையோடும்
எங்களை வசீகரிக்கும்
எங்கள் அமுதே !!

முருகனின் அழகோடும்
முகுந்தனின் குறும்போடும்
எங்களை ஆட்கொண்ட
எங்கள் நந்தனே !!

கீதை துணைக்  கொண்டு
காமராஜர் வழிச்  சென்று
உலகை செழிக்க வைக்க
உளமார வாழ்த்துகிறோம் !!




Saturday, January 7, 2017

நந்தனின் முதல் பிறந்தநாள்


என் அன்பு மகன் நந்தனின் முதல் பிறந்தநாள் 
அழைப்பிதழுக்காக எழுதிய சிறு கவிதை

குறும்பு கண்டு குதூகலித்த வருடம் 
புன்சிரிப்பு கண்டு பூரித்த வருடம்
மழலை கேட்டு மகிழ்ந்த வருடம்
பட்டுக்கன்னம் தொட்டு பரவசித்த வருடம்
கண்ணனும் கந்தனும் அருளிய
எங்கள் குட்டி நந்தனின் முதல் வருடம்
உங்கள் ஆசீர்வாதம் பெற்று
முழுமை பெற அன்புடன் அழைக்கிறோம்



Tuesday, December 23, 2014

குளிரும் காலை

உதித்த ஆதவனும் குளிர் கண்டு, 
மேக போர்வைக்குள் உறங்க செல்ல, 
நான் மட்டும் எழுந்து 
அலுவலக்ம் செல்ல வேண்டுமா ??

Sunday, March 16, 2014

புலியின் சீற்றம்


மருந்துக்காக அழித்தாய், 
மாந்திரிகத்துக்காக அழித்தாய், 
எனை அழிப்பதனால் காட்டினையும்  
அழிக்கிறாய் என உணர்ந்தாயா? 

வயிற்றுப் பசிக்கு  வேட்டையாடும் 
எனை கொடிய மிருகம் என்கிறாய், 
பணப் பசிக்கு இனத்தையே வேட்டையாடும் 
உனை என்ன சொல்லி அழைக்க?

பல லட்சமாக காடுகளை ஆண்ட 
எனை சில நூறாக குறைத்தாய்,
நான் சுவடின்றி அழியும் வரை 
உன் கொலை வெறி அடங்காதா?

தேசிய விலங்கென, வீரத்தின்
சின்னமென அடையாளம் தந்தாய்,
இன்றோ எனை அழியும் இனங்களின்
அடையாளமாக மாற்றியது ஏனோ?

நானும் உனை போல இப்புவியில்  
வாழ உரிமை பெற்ற இனமன்றோ !!
ஆறறிவு பெற்றதனால் மட்டுமே, நீ
தனியே வாழ முடிவெடுத்தாயோ?

பரிணாம வளர்ச்சியில் நீ பெற்ற
அறிவு எனை அழிக்கத்  தானா? 
இப்பொழுதேனும் விழிப்பாய் மனிதா !!
நீயும் வாழ் .. என்னையும் வாழ விடு !!

Tuesday, February 4, 2014

மகிழ்ச்சி

கடலுக்கு நதியின் வருகை மகிழ்ச்சி
கமலிக்கு ஆதவனின் உதயம் மகிழ்ச்சி

மழையோடு வெயில் வானவில்லிற்கு மகிழ்ச்சி
மானிற்கு பசுமையான புல்வெளி மகிழ்ச்சி

நெற்கதிர்க்கு நீரின் வரவு மகிழ்ச்சி
நெசவாளிக்கு பட்டு உற்பத்தி மகிழ்ச்சி

வேழத்திற்கு  இன்சுவை கரும்பு மகிழ்ச்சி
வேதனையுறும் குழந்தைக்கு தாலாட்டு மகிழ்ச்சி

தேனீக்கு மலரின் மலர்ச்சி மகிழ்ச்சி
தேனே, எனக்கோ உன் புன்னகையே மகிழ்ச்சி

Monday, October 21, 2013

ஒளி காட்டும் வழி

வாசலை அலங்கரிக்கும் கோலங்களில்லை
தெருக்களில் ததும்பும் உற்சாகமில்லை
குதுகலித்து ஓடியாடும் சிறுவர் கூட்டமில்லை
அன்பை இனிப்புடன் பரிமார சொந்தங்களில்லை
வான் ஒளிரும் வான வேடிக்கைகளில்லை
செவி அதிரும் பட்டாசு சத்தமில்லை
திருநாளுக்கான எந்த அறிகுறியுமில்லா
அமைதியான தீபாவளி இன்று
கடல் கடந்து அமெரிக்காவில் !!
ஒளி விளக்கு மட்டுமே பிரகாசித்து
எண்ணெயும், திரியுமாய் இருந்தால்
இருள் அகன்று ஒளி பிறப்பது போல
இன்னல் அகன்று வாழ்வு பிரகாசிக்குமென
வாழ்த்தி வழி காட்ட
என்னவளுடன் என் முதல் தீபாவளி
நம்பிக்கை ஊட்டும் ஒளி காட்டும் வழி !!
நானிலத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஒளி காட்டும் நல்வழி  !!

இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது.

Thursday, August 1, 2013

இதயம் வரையும் மடல்

என்னவளுக்கு என் இதயம் வரையும் மடல் --

நிழலென என்னுடன் வரவிருக்கும் என்னவளே,
இன்னுயிருடன் இணையவிருக்கும் இனியவளே,
காலங்கள்  அனைத்தையும் வசந்த காலமாக மாற்றவிருப்பவளே,
சூறாவளியையும் தென்றலாக வீச வைப்பவளே,
இருளை அகற்ற வந்த வெண்ணிலாவே,
வாழ்க்கையை மணக்கச் செய்ய வந்த மல்லிகையே,
தனிமை சிறையிலிருக்கும் எனை விடுவிக்க வந்த தாரகையே,
நெடும் பயணத்திற்கு துணையாய் வரவிருக்கும் என் பாதியே,
என்னை என்னிடமிருந்து திருடியதற்கு தண்டனையாக,
உனை எனில் சிறை வைக்கப் போகிறேன் 
நம் திருமணத்தின் மூலம்...

Tuesday, July 2, 2013

மூடர்கள், பகுத்தறிவாளிகள்

தெய்வங்களைச் சிலையாக உருவகப்படுத்தி
வணங்குபவர்கள்  மூடர்கள்,
தங்கள் தலைவரைச் சிலையாக உருவகப்படுத்தி
வணங்குபவர்கள் பகுத்தறிவாளிகள் !!.

கீதைப் படி அன்பு வழி நடக்க
முற்படுபவர்கள் மூடர்கள்
தங்கள் தலைவரின் சொற்படி கோவிலையும் இடிக்க
முற்படுபவர்கள் பகுத்தறிவாளிகள் !!

மந்திரங்கள்  ஓத கடவுள் சாட்சியாக திருமணம் 
செய்பவர்கள்  மூடர்கள்,
சம்பிரதாய பேச்சுடன் தங்கள் தலைவர் சாட்சியாக திருமணம் செய்பவர்கள் பகுத்தறிவாளிகள் !!

கடவுளின் பெயரால் நற்செயல்
செய்தாலும் மூடர்கள்,
தலைவரின் பெயரால் நற்செயல்
செய்தால் மட்டுமே  பகுத்தறிவாளிகள் !!

செயல் ஒன்று அர்த்தம் மட்டும் ஏனோ இரண்டு

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மூடர்கள்,
'தலைவன்' நம்பிக்கை கொண்டவர்கள் பகுத்தறிவாளிகள்,
என்ற இந்த பார்வை கொண்டவர்கள் என்று மாறுவார்கள் ?? 

Thursday, April 4, 2013

நீயின்றி அணுவும் அசைவதில்லை

என் வாழ்வூதியம்  தரும் முதலாளியானாய்,
என் தனிமைக்குத் துணையானாய்,
என் பயணம் எங்காயினும் வரும் பயணியானாய்,
என் தமிழ் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகமானாய்,
விடியல் தொடங்கி இரவு வரை என்னுடனே இருக்கும் நிழலானாய்,
கையிலிருந்தபடி அறிவினைத் தரும் ஆசானானாய்.

இவை அனைத்துமாகி எனை உன்னிடத்தில் சிறை வைத்தாய்,
சக மனிதர்களிடம் பழகுவதை குறைக்க வைத்தாய்.
உன்னை விட்டு போய்விடுவேன் என்ற பொறாமையா?
என்னையும் உன்னைப் போல எந்திரமாக்கிவிட்டாய்.

நீ நல்லவனா?  வல்லவனா?  கொடியவனா?
தெரியவில்லை..  ஆயினும்
நீயின்றி அணுவும் அசைவதில்லை எனக்கு,
என் கணினியே!! நீயின்றி உலகில்லை எனக்கு !!

  

Friday, March 22, 2013

இதுவும் நடக்கும்....

இலங்கை தமிழர் நலனுக்காக உலக நாடுகள் பாடுபடும்,
இந்தியாவில் பெருகி கிடக்கும் ஊழல் ஒழியும்,
இந்திய அரசு தீவிரவாத்தை முற்றிலும் ஒழிக்கும்,
அரசு அலுவலங்களில் லஞ்சமின்றி வேலை நடக்கும்,
வரி ஏயப்பு என்பது இல்லாமல் போகும்,
தமிழகத்தில் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கும்,
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கும்,
கர்நாடகம் உரிய காவேரி நீரைத் தமிழகத்திற்கு திறக்கும்,
பள்ளிகள் முறையான கட்டணம் வசூலிக்கும்,
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்கும்,
எளியோருக்கும் கருத்துரிமை கிடைக்கும்,
இவை எல்லாம் நடக்கும்,
இதற்கு மேலும் கூட நடக்கும்.
உலகம் மறுபடியும் பிறந்து வந்தால் !!

Thursday, March 21, 2013

உயிர் மொழி

அன்பு நிறைந்த மொழி,
ஆண்டவன் அருளிய மொழி,
இலக்கணமில்லா மொழி,
ஈடு இணை இல்லா மொழி, 
உவகை தரும் மொழி,
ஊரார் அனைவரையும் மயக்கும் மொழி,
எளிதில் மேதைகளுக்கும் புரியா மொழி,
ஏக்கம் தீர்க்கும் மொழி,
ஐயமேதும் எழா மொழி,
ஒளிவு மறைவற்ற மொழி,
ஓங்கார இசையினும் இனிய மொழி,
ஔவை ரசித்த மொழி,
அஃதே.. மழலை மொழி !!..

Saturday, March 16, 2013

குழந்தை தொழிலாளி



கல் நெஞ்சம் கொண்டவர்களிடம்
கல் உடைக்கிறேன்,

கடனாளி பெற்றோரிகளின்
கடன் தீர்க்கும் பொருளாகிறேன்,

படிப்பின் மூலம் ஒளி தருவதை விடுத்து
பட்டாசின் மூலம் ஒளி தருகிறேன்,

ஓடியாடி விளையாடாமல்  பணத்தாசை ம(மா)க்களுக்காக
ஓடியாடி உழைக்கிறேன்,

சிறப்பான கல்வியினை நோக்கி  ஓட ஆசை கொண்டும்
சில்லறை தேடி ஓட வற்புறுத்தப்படுகிறேன்,

ஈரமற்ற முதலாளியின் பாத்திரங்களை   கண்களின்
ஈரம் கொண்டு கழுவுகிறேன்,

ஆயிரமாயிரம் கண்கள் என்னை கடந்த   போதும்
ஆண்டவன் மட்டுமே துணையாக வருகிறான்,

பரிதவிக்கும் கண்கள் கூட இரக்கப் பார்வை  மட்டுமே
பரிசாகத்  தருகின்றன,

இரக்கமற்ற சமுதாயமே.. மனம் இறங்கி கேட்கிறேன்
இறுக்கம் தளர்த்தி உதவ மாட்டாயா?

கருவறையிலிருந்து   வெளிப்பட்ட முதல் உழைக்கிறேன்
கண் கொண்டு பார்க்க மாட்டாயா?

என் கதறலை  உன் செவி கேட்க மறுக்கிறதா ?
என் நிலை மேன்பட ஏதேனும் செய்ய மாட்டாயா?

இந்த கவிதைக்கு அட்லாண்டா மாநகர தமிழ் சங்கத்தின் கவிதை போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்தது 



Friday, February 1, 2013

மாய உலகம்


என் விழித்திரையில் விழும் காட்சிகள்,
என் நரம்பு மண்டலம் உணரும் உணர்ச்சிகள்,
என் செவி மடல் கேட்கும் ஒலிகள்,
இவை மட்டும் தான் நிஜமோ?
மற்ற அனைத்தும், அனைவரும் மாயையோ?
என் குடும்பத்தாரும், நண்பர்களும் கூட மாயையோ?
இல்லையெனில், ஏனையோரின் உணர்ச்சியை
ஏன் என்னால் உணர முடியவில்லை?
அவர்களின் உலகத்தை ஏன் என்னால் காண முடியவில்லை?
மாயையெனில், நான் மட்டும் இந்த உலகத்தில் தனியோ?
உலகத்தில் அனைத்தும் எனக்காகப் படைக்கப்பட்டதோ?
உலகத்திற்கு என்னைத் தனியாக அனுப்பிய
கடவுளின் நோக்கம் தான் என்னவோ?
இல்லை இந்த கேள்விகள் எல்லாம் நான் பித்துப்பிடித்தவனாக
மாறிக் கொண்டு இருக்கிறேன் என்பதற்கான அறிகுறியோ?
இந்த கேள்விகளுக்கு பதில் தருவோர்
யாருமுண்டோ இந்த உலகத்தில்.... மாய உலகத்தில் !!

ஓட்டம்


சிறுவயதில் விளையாட்டை மறந்து
தரவரிசை(ரேங்க்) நோக்கி ஓட்டம்,
பருவ வயதில் சுயவிருப்பத்தை மறந்து
 'காகித' பட்டம் நோக்கி ஓட்டம்,
பட்டம் பெற்றவுடன் படித்த படிப்பை மறந்து
'கணினி' வேலை நோக்கி ஓட்டம்,
பின் குடும்பத்தைப் பிரிந்து
பதவி உயர்வு நோக்கி ஓட்டம்,
இன்று தாய்நாட்டை துறந்து
பணத்தை நோக்கி ஓட்டம்,
எதற்காக இந்த தொடர் ஓட்டம்?
யாருக்காக இந்த ஓட்டம்?
எதை நோக்கி இந்த இலக்கிலா ஓட்டம்?
எங்கே நிற்கும் இந்த ஓட்டம்?

Wednesday, October 31, 2012

நவீன நவரசம்



மின்வெட்டு குறித்து நமது முதல்வரும், முன்னாள்
முதல்வரும் பேசும் பேச்சைக் கேட்கும்
பொழுது நகை உணர்வு,

மின்வெட்டு காலத்திலும் வரும் மின் கட்டணம்
பார்க்கும் பொழுது அழுகை உணர்வு,

மின்வெட்டுக்கு காரணமான ஆட்சியாளர்களைப் பற்றி
பேசும் பொழுது இளிவரல் (இகழ்ச்சி) உணர்வு,

மின்வெட்டால் பாதிக்கப்படும் சிறு தொழிலாளர்களை
நினைக்கும் பொழுது மருட்கை(மயக்க) உணர்வு,

இன்னும் எத்தனை நாள் மின்வெட்டு நீடிக்கும் என்று
நினைக்கும் பொழுது அச்ச உணர்வு,

'கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தா சரியாகிவிடும்' என்று ஆட்சியாளர்கள் கூறியதை நம்பியதை நினைக்கும்
பொழுது வெகுளி உணர்வு,

நமக்கு மின்சாரம் இல்லாத போதும், நமது தொகுப்பில் இருந்து
அண்டைய மாநிலத்திற்கு செல்லும் மின்சாரத்தை குறைக்காமல்
இருப்பதை நினைக்கும் பொழுது பெருமித உணர்வு,

போன மின்சாரம் திரும்பி வரும் பொழுது
உவகை (மகிழ்ச்சி) உணர்வு,

என்றுமே மின்வெட்டில் இருக்கும் பல்லாயிரம்
மக்களைப் பற்றி நினைக்கும் பொழுது அமைதி உணர்வு,

என நவரசத்தையும் தருகிறது (தமிழக) மின்சாரம் !!

Monday, August 13, 2012

விழித்து எழு தமிழா !!

உலகின் முதல் கப்பல் படை, யானைப்படை நிறுவி,
போர்கள் பல வென்று தரணி ஆண்ட எம் தமிழினம் !!
பொது மறையாம் திருக்குறள் தந்து உலகினுக்கு 
வாழ்க்கை நெறியை கற்று தந்த எம் தமிழினம் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோள்களின்  
அமைப்பையும், தாக்கத்தையும் அறிந்திருந்த எம் தமிழினம் !!
ஓர் அறிவு உயிர், ஈர் அறிவு உயிர் என தொல்காப்பியம் மூலம் 
டார்வினுக்கு முன்னரே உயிரின் தோற்றத்தை 
கூறியிருந்த  எம் தமிழினம் !!
உலோகம் பற்றி  ஏனைய நாடுகள் அறியாத காலத்தில் 
அவற்றை கொண்டு அழகிய சிலைகள் தந்த எம் தமிழினம் !!
பெரிய கோவில், மகாபலிபுரம், மீனாட்சி அம்மன் கோவில் என
கட்டிடக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்த எம் தமிழினம் !!
அணுவின் சக்தி குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு 
முன்னரே  பாடிய எம் தமிழினம் !!
பல நூறு சித்தர்களையும், அவர்கள் மூலம்
சித்தவைத்தியத்தையும்  தந்த எம் தமிழினம் !! 
ஆதிவாசியாய் ஏனைய உலகம் இருந்த பொழுதும் 
(கல்)அணைக் கட்டி, யானை கொண்டு போரடித்து 
விவசாயம் செய்த எம் தமிழினம் !!
இன்னும்  எண்னில் அடங்கா  மேன்மை
வாய்ந்த எம் தமிழினம்  இன்று,
தன் முன்னே சொந்த சகோதரர்(ரி)கள் சாகக்கண்டும், 
ஒன்றும் செய்ய இயலாத கோழை இனமாக மாறியது ஏனோ?
'அம்மா', 'அப்பா'வை விடுத்து, 'மம்மி'களையும், 'டாடி'களையும்,
அரவணைத்து கொண்டது ஏனோ?
தன் வாழ்க்கை நெறியை தவிர்த்து, மேற்கத்திய 
வாழ்க்கை முறைக்கு மாறியது ஏனோ?
அறிவு மழுங்கி மேற்கத்திய நாடுகளுக்கு உழைக்கும் 
அடிமைகளானது ஏனோ?
தமிழன் என்ற  கர்வத்தினை, இறுமாப்பினை இழந்து 
தமிழன் என்று சொல்லக்கூட  தயங்குவது ஏனோ?
10000 ஆண்டுகள் மேற்ப்பட்ட நம்  மேன்மையை, அறிவை. 
800 ஆண்டுகளே ஆக்கிரமித்த முகலாயர்களிடமும், 
ஆங்கிலேயர்களிடமும் பறி கொடுத்து விட்டோமா? 
இந்நிலை மாற வேண்டாமா? 
நம் அடிமை மோகம் தனிய  வேண்டாமா? 
இழந்த  மேன்மையை மீட்க வேண்டாமா? 
ஆழந்த நித்திரையில் இருக்கும் நாம்..
விழித்து எழுவோம்  !! வீறு கொண்டு எழுவோம்  !!
தமிழினத்தின் பெருமையை  ஆராய்ந்து அறிந்து 
உலகினுக்கு  உரக்கச் சொல்வோம் !!. 
இழந்த  மேன்மையை  அடைவதற்கான
இந்த முதல் படியினை எடுத்து வைப்போம் !!
தமிழைக் கற்று உணர்ந்து மேலும் மேன்மையடைய
இன்னும் பல சாதனை செய்வோம் !!
நம் மொழி தொன்மையானது என்ற பெருமையை
காத்து நம் சந்ததியினர்க்கு வழங்குவோம்!!
பின் விடியல் பிறக்கும்  நம் தமிழுக்கும்,  நம் தமிழினத்திற்கும் !!

Friday, July 6, 2012

இல்லறம்

என் நண்பனின் திருமணத்தை முன்னிட்டு நான் எழுதிய கவிதை




இரு கண்களில் ஓர் பார்வைத்  தோன்ற, 
இரு இதயங்கள் ஓர் உணர்ச்சியை உணர,  
இரு மனதில்  ஓர்  சிந்தனை உதிக்க, 
இரு மெய்யில்  ஓர்  உயிர் வாழத்  தொடங்க,
இரு பாதை ஓர் பாதையாக, 
இரு மனம்  ஒரு மனமாக,
உதயமானது நல்லறமான இல்லறம் !!

Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு



அறம் தழைத்து,
செல்வம் செழித்து,
அறிவு மிளிர்ந்து, 
ஆரோக்கியம் சிறந்து,
இன்பம் பெருகி, 
மகிழ்ச்சி பொங்கி,
நந்தன வருடம், 
நந்தவனம் ஆகட்டும் !!

Thursday, December 22, 2011

சிறைச்சாலை


சுற்றமும் நட்பும் வாழ்த்த,
அன்னையும் தந்தையும் ஆசிர்வதிக்க,
சிறைச்சாலைக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டான்
இன்று அவனுக்கு திருமணம் !!

Sunday, November 13, 2011

கடமை உணர்ச்சி


கடமை உணர்ச்சி -
சிதைந்து உடைந்த பின்னும் உருவம்
காட்டும் நிலைக்கண்ணாடி !!
Related Posts Plugin for WordPress, Blogger...